சிங்கப்பூர் கடற்பகுதியில் 2026 ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெற்ற பவளப் பாறைகளின் வருடாந்தர கூட்டு இனப்பெருக்க நிகழ்வு வழக்கத்தைவிட மிகவும் மந்தமாக இருந்ததாக தேசியப் பூங்கா வாரியம் தெரிவித்துள்ளது.
ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கம் அருகே உள்ள சத்துமு தீவில் (Pulau Satumu) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பவளப் பாறைகள் முட்டைகளையும் விந்தணுக்களையும் வெளியிடும் அளவு கணிசமாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, ஆண்டுக்கு ஒருமுறை பௌர்ணமிக்குப் பிறகு கடலுக்கடியில் பனிப்பொழிவு போல பவளப் பாறைகள் முட்டை இடும் இந்த அதிசய நிகழ்வு, இம்முறை மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான கடல் வெப்ப அலையினால் 40 விழுக்காடு பவளப் பாறைகள் வெளுப்படைந்ததும் 2025 செப்டம்பரில் சத்துமு தீவுப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான பவளப்பாறை வெளுப்பும் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வெப்ப அலை, சுற்றுச்சூழல் அழுத்தங்களால் பவளப் பாறைகளின் ஒட்டுமொத்த மீள்திறன் குறைந்துள்ளதையே இனப்பெருக்கச் சரிவு காட்டுவதாக தேசிய பூங்கா கழகத்தின் தேசிய பல்லுயிர் மைய இயக்குநர் கரேன் டுன் தெரிவித்தார்.
“தொடர்ச்சியான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பவளப் பாறைகள் இன்னும் முழுமையாக நலமடையவில்லை. அதனால் கூட்டு இனப்பெருக்கத்திற்கான ஆற்றல் அவற்றிடம் போதிய அளவு இல்லை,” என்று சிங்கப்பூர் வெப்பமண்டல கடல் அறிவியல் கழக ஆய்வாளர் லியோனல் நங் கூறினார்.
‘எல் நினோ’ அச்சுறுத்தல்
மலாக்கா நீரிணையிலிருந்து தென்மேற்கு பருவக்காற்று கொண்டு வந்த மாசடைந்த, மேகமூட்டமான நீர் பவளப் பாறைகளுக்குக் கிடைக்கும் ஒளியைக் குறைத்ததும் 2025 வெளுப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் சக்திவாய்ந்த ‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் உருவாகும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது உலகளாவிய கடல் வெப்பத்தை மேலும் அதிகரித்து, பவளப் பாறைகளுக்கு கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் என உலகெங்கிலும் உள்ள கடல் அறிவியலாளர்கள் அச்சப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த சவால்களை எதிர்கொள்ள, அறிவியல் அறிஞர்கள் தற்போது பவளப் பாறைகளைச் செயற்கையாகக் கருவுறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் சேகரிக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு ஆய்வகத்தில் பவளப் பாறை குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மரபணு பன்முகத்தன்மை கொண்ட, சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாங்கி வளரக்கூடிய வலிமையான பவளப் பாறைகளை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

