முழுநேர வேலை கிடைத்த உள்ளூர் பட்டதாரிகளின் எண்ணிக்கை சரிவு

முழுநேர வேலை கிடைத்த உள்ளூர் பட்டதாரிகளின் எண்ணிக்கை சரிவு

2 mins read
e6816790-555b-4834-855a-39a6ed885205
2024ஆம் ஆண்டில் 79.4 விழுக்காடாக இருந்த முழுநேரப் பணியில் சேர்ந்த பட்டதாரிகளின் விகிதம், 2025ஆம் ஆண்டில் 74.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம், குறிப்பாக முழுநேரப் பணிகளில் சேருவோரின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கான ஊதிய அளவு மாறாமல் நிலையாக உள்ளது.

வியாழக்கிழமையன்று (மார்ச் 5) வெளியிடப்பட்ட அண்மைய பட்டதாரிகள் வேலைவாய்ப்பு ஆய்வின் முடிவுகள் பின்வருவனவற்றைத் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டில் 79.4 விழுக்காடாக இருந்த முழுநேரப் பணியில் சேர்ந்த பட்டதாரிகளின் விகிதம், 2025ஆம் ஆண்டில் 74.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த தொழிலாளர் சந்தைப் பங்கேற்பு விகிதம் 90.7 விழுக்காட்டிலிருந்து (2024) 92.2 விழுக்காடாக (2025) உயர்ந்துள்ளது.

முழுநேரப் பணியில் சேர்ந்தவர்களுக்கான இடைநிலை மொத்த மாதச் சம்பளம் 2024ஆம் ஆண்டைப் போலவே 2025ஆம் ஆண்டிலும் $4,500 என்ற அளவில் நீடிக்கிறது.

வேலைக்கு விண்ணப்பித்தும் எந்தவொரு வேலை வாய்ப்பும் கிடைக்காதவர்களின் விகிதம் 2024ஆம் ஆண்டில் 5.7 விழுக்காடாக இருந்தது, இது 2025ஆம் ஆண்டில் 8.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தற்காலிக அல்லது பகுதிநேரப் பணிகளில் சேரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இது 6 விழுக்காடாக இருந்தது.

ஆறு உள்ளூர் பல்கலைக்கழகங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பின்பு இருந்த நிலையிலிருந்து தற்போது வேலை காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகளாவியப் பொருளியல் சூழல் மற்றும் அரசியல் மாற்றங்களால் நிறுவனங்கள் புதிய ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.

தகவல், தொடர்புத் துறை போன்ற வெளிநாட்டுச் சந்தைகளைச் சார்ந்திருக்கும் துறைகளில் முந்தைய ஆண்டுகளைவிட ஊழியர் சேர்க்கை மந்தமாக உள்ளது.

நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகள், தொழில்முறை சேவைகள் போன்ற வளர்ச்சித் துறைகளில் இன்னும் ஏறத்தாழ பத்தில் நான்கு பங்கு நுழைவு நிலை வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நிதி இணக்க அதிகாரிகள், தணிக்கையாளர்கள் போன்ற பணிகளுக்கான தேவை உள்ளது.

பொதுவாக, பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்படும் இந்த ஆய்வு முடிவுகள், காலப்போக்கில் மேம்படும் என்று பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்