உலகளாவிய செல்வந்தர்கள் சிங்கப்பூருக்குக் குடிபெயர்வது தொடர்ந்து அதிகரித்தபோதிலும், கடந்த ஆண்டு வெளிநாட்டினர் வாங்கிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை சுருங்கியது.
2023 மே முதல் 2024 ஏப்ரல் வரை 321 கொண்டோமினிய வீடுகளை மட்டுமே வெளிநாட்டினர் வாங்கினர். இது அதற்கு முந்திய ஆண்டில் அவர்கள் வாங்கிய 1,054 வீடுகளைக் காட்டிலும் குறைவு.
நகர மறுசீரமைப்பு ஆணையம் இதனைத் தெரிவித்தது.
சராசரியாக மாதத்திற்கு 26 கொண்டோமினிய வீடுகளை வெளிநாட்டினர் 2023ஆம் ஆண்டில் வாங்கினர்.
இந்த ஆண்டு அதன் விகிதம் இன்னும் சுருங்கியது.
2024 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 88 கொண்டோமினிய வீடுகள் விற்பனை ஆயின. சராசரியாக மாதம் ஒன்றுக்கு 22 வீடுகளை வெளிநாட்டினர் வாங்கியதை இது காட்டுகிறது.
வீடுகளை வாங்கும் வெளிநாட்டினருக்கு 60 விழுக்காடு கூடுதல் முத்திரை வரி விதிக்கப்பட்டதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
அந்த கூடுதல் வரிவிதிப்பு வெளிநாட்டு முதலீடுகளைக் கணிசமாகக் குறைத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, விலை உயர்ந்த குடியிருப்புச் சொத்துகளின் விற்பனையில் அது தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்த நிபுணர்கள் கூறினர்.
ஒழுங்குமுறை விதிகள் நடப்பில் இருந்தபோதிலும், வசதிபடைத்தோரை சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
2023ஆம் ஆண்டு அதிக நிகர சொத்து மதிப்பை வைத்திருந்த 3,400 பேர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தனர்.
‘ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்’ என்னும் முதலீட்டு நகர்வு ஆலோசனை நிறுவனம் தனது ‘உலகளாவிய செல்வந்தர்களின் நகரங்கள்’ என்னும் அறிக்கையில் இந்த விவரத்தைக் குறிப்பிட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்த பின்னர், சிங்கப்பூரில் வசிக்கும் மில்லியன்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை 244,800ஐத் தொட்டது. பில்லியன்கணக்கில் சொத்து வைத்துள்ளோரின் எண்ணிக்கையும் 30 ஆனது.

