தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை சரிவு

2 mins read
576207eb-3275-40ee-b2b1-f2cd9a481579
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 853. அவர்களில் 76 விழுக்காட்டினருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது. - படம்: சாவ்பாவ்

கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் வாழும் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 1,411.

இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி 1,109ஆகக் குறைந்தது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 853.

அவர்களில் 76 விழுக்காட்டினருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது.

இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, கல்வி ஆகியவற்றில் வழங்கப்படும் மானியங்களை அவர்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

குடியுரிமை இல்லாதோரில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டினருக்கு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சிறப்பு அட்டையை வழங்கியுள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூரில் வாழ அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அட்டைகளின் காலாவதி தேதி ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று உள்துறை அமைச்சு கூறியது.

ஒருவர் குடியுரிமை இல்லாதவராக இருப்பதற்குப் பற்பல காரணங்கள் இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சிலர் தங்கள் வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்திருக்கக்கூடும்.

சட்டத்தை மீறியதற்காக சிலரது சொந்த நாடு அவர்களது குடியுரிமையை ரத்து செய்திருக்கக்கூடும்.

“சிலர் சிங்கப்பூரில் பிறந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் பிறந்தபோது சிங்கப்பூர் குடியுரிமை பெற தகுதி பெறாத நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். அவர்கள் சிங்கப்பூரில் பிறந்தபோது அவர்களது பெற்றோர் சிங்கப்பூர் குடியுரிமை பெறாதவர்களாக இருந்திருக்கலாம் அல்லது தங்கள் பிள்ளைகளுக்காக சொந்த நாட்டின் குடியுரிமையை அவர்கள் பெறாமல் இருந்திருக்கக்கூடும்,” என்று அமைச்சு கூறியது.

சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்காக விண்ணப்பம் செய்யும் ஒவ்வொரு குடியுரிமை இல்லாதோரின் விண்ணப்பத்தை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மதிப்பீடு செய்வதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

விண்ணப்பத்தாரர்கள் சிங்கப்பூரில் வசித்துள்ள கால அளவு, அவர்களது குடும்பம் தொடர்பான விவரங்கள், பொருளியல் பங்களிப்பு, கல்வித் தகுதி, வயது, சிங்கப்பூரர்களுடான உறவு போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சு கூறியது.

குடியுரிமை இல்லாத நிலை ஏற்பட்டதற்கான காரணம் போன்ற விண்ணப்பதாரர்களின் சூழ்நிலை குறித்தும் ஆணையம் பரிசீலனை செய்யும் என்று அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்