சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மை சரிவு

இலகுரக ரயில் நம்பகத்தன்மை மேம்பாடு

சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மை சரிவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 4:44 pm

2 mins read

சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மை அக்டோபரில் சற்றுச் சரிந்துள்ளது. ஐந்து முதிர்ச்சியடைந்த ரயில் பாதைகளில் இரு பாதைகளின் செயல்திறன் குறைந்ததே அதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

2025ஆம் ஆண்டு நவம்பருக்கும் 2026ஆம் ஆண்டு அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில், ஐந்து நிமிடங்களுக்கு மேலான தாமதங்களுக்கு இடையே ரயில்கள் சராசரியாக 3.14 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முந்தைய மாத அறிக்கையில் இது 3.38 மில்லியன் ரயில்-கிலோமீட்டராக இருந்தது.

செயல்திறனில் சரிவு ஏற்பட்ட போதிலும் முழு எம்ஆர்டி ரயில் கட்டமைப்புக்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு மில்லியன் ரயில்-கிலோமீட்டர் நம்பகத்தன்மை இலக்கைவிட தற்போதைய அளவு மூன்று மடங்கு அதிகமாகும்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் இயக்கப்படும் வட்ட ரயில் பாதையும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படும் டௌண்டவுன் ரயில் பாதையும் குறைந்த நம்பகத்தன்மையைப் பதிவுசெய்த இரு ரயில் பாதைகள் ஆகும்.

வட்ட ரயில் பாதையின் நம்பகத்தன்மை 2.57 மில்லியன் ரயில்-கிலோமீட்டரிலிருந்து 1.97 மில்லியனாகவும் டௌண்டவுன் ரயில் பாதையின் நம்பகத்தன்மை 4.19 மில்லியனிலிருந்து 4.18 மில்லியன் ரயில்-கிலோமீட்டராகவும் சரிந்தன.

கிழக்கு-மேற்குப் பாதை 3.36 மில்லியன் ரயில்-கிலோமீட்டரில் மாற்றமின்றி நீடித்தது.

வடக்கு-தெற்கு ரயில் பாதை 2.48 மில்லியனிலிருந்து 2.49 மில்லியனாகவும் வடக்கு-கிழக்கு ரயில் பாதை 4.5 மில்லியனிலிருந்து 4.51 மில்லியன் ரயில்-கிலோமீட்டராகவும் சற்று முன்னேறின. அக்டோபரில் எந்தப் பாதையிலும் 30 நிமிடங்களுக்கு மேலான தாமதங்கள் ஏற்படவில்லை.

ஒட்டுமொத்தமாக, ரயில்கள் குறித்த நேரத்திற்கு வருவது 99.36 விழுக்காட்டிலிருந்து 99.63 விழுக்காடாக உயர்ந்தது. அட்டவணைப்படி இயங்கிய ரயில் சேவைகள் 99.84 விழுக்காட்டிலிருந்து 99.96 விழுக்காடாக அதிகரித்தன.

புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நம்பகத்தன்மை 498,000 ரயில்-கிலோமீட்டரிலிருந்து 439,000 ரயில்-கிலோமீட்டராகக் குறைந்தது.

இதன் ஐந்தாம் கட்டமான பிடோக் சவுத், சுங்கை பிடோக் நிலையங்கள் டிசம்பர் 26ஆம் தேதி திறக்கப்பட்ட பிறகு செயல்பாடு மேம்படும் என ஆணையம் எதிர்பார்க்கிறது.

இதற்கிடையே, இலகு ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மை 622,000 கார்-கிலோமீட்டரிலிருந்து 813,000 கார்-கிலோமீட்டராக மேம்பட்டுள்ளது.

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் 911,000 கார்-கிலோமீட்டரையும், புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் 667,000 கார்-கிலோமீட்டரையும் பதிவு செய்துள்ளன.

புதுப்பிப்புப் பணிகள் பெருமளவில் நிறைவடைந்ததே இதற்குக் காரணம் என ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்