ஈரான் போரால் சிங்கப்பூரில் கப்பல் எரிபொருள் விற்பனை சரிவு

ஈரான் போரால் சிங்கப்பூரில் கப்பல் எரிபொருள் விற்பனை சரிவு

படம்: எஸ்பிஎச் மீடியா

16 Oct 2026 - 9:32 pm

2 mins read

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக, சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், கடந்த செப்டம்பரில் கப்பல் எரிபொருள் விற்பனை சற்று சரிவைக் கண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கப்பல் எரிபொருள் நிரப்பும் மையமான சிங்கப்பூரில், செப்டம்பர் மாதத்தில் 4.7 மில்லியன் டன்னிற்கும் அதிகமான கப்பல் எரிபொருள் விற்பனையானது. இது முந்தைய மாதத்துடனும் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடனும் ஒப்பிடுகையில் ஒரு விழுக்காடு குறைவாகும்.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை விற்பனை உயர்ந்து வந்த நிலையில், செப்டம்பரில் நிலைமை மாறியுள்ளது.

செப்டம்பரில் எரிபொருள் நிரப்புவதற்காக 3,617 கப்பல்கள் சிங்கப்பூர் வந்தன. இது முந்தைய மாதத்தை விட 0.8 விழுக்காடும், கடந்த ஆண்டை விட 2.8 விழுக்காடும் அதிகம். இருந்தபோதும், வருகை தந்த கப்பல்களின் மொத்தக் கொள்ளளவு குறைவாக இருந்ததே விற்பனை சரிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களின் வருகை முந்தைய மாதத்தைவிட 4.9 விழுக்காடு குறைந்து 1,466 ஆகப் பதிவானது.

கப்பல்களின் வருகை குறைந்ததால் இந்தச் சரிவு ஏற்படவில்லை என்று எரிபொருள் விலை ஆய்வு நிறுவனமான ‘ஆர்கஸ் மீடியா’வின் ஆசிய-பசிபிக் பிரிவுத் தலைவர் மஹுவா மித்ரா கூறினார்.

கப்பல் உரிமையாளர்கள் குறைந்த சல்ஃபர் கொண்ட எரிபொருளைக் குறைவாக வாங்கியதும், அதிக சல்ஃபர் கொண்ட மாற்று எரிபொருள்களைப் பயன்பாட்டிற்குக் கவனமுடன் தேர்வு செய்ததுமே இந்த விற்பனை மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மயக்கம்கப்பல்எண்ணெய்சரிவுசிங்கப்பூர்