சிங்கப்பூரில் சென்ற ஆண்டு அகற்றப்பட்ட கழிவுகளின் அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தியான கழிவுகளின் ஒட்டுமொத்த அளவு குறைந்தபோதிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகளின் விகிதம் குறைவாகப் பதிவானது.
மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற ‘கேட்டலிஸ்ட் 2026’ எனும் சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மைக்கான கருத்தரங்கில் தேசியச் சுற்றுப்புற வாரியம் கடந்த ஆண்டின் கழிவுகள் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஒவ்வொருவரும் ஒரு நாளில் 0.83 கிலோகிராம் எடையுள்ள குப்பைகளை வீசினர். 2015ஆம் ஆண்டில் அது 1.06 கிலோகிராமாக இருந்தது.
மேலும், ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதமும் கடந்த ஆண்டு நிலையாக இருந்ததை வாரியம் சுட்டியது. கடந்த ஆண்டு அது 52 விழுக்காடாகப் பதிவானது. 2015ஆம் ஆண்டில் இந்த விகிதம் 61 விழுக்காடாக இருந்தது.
“வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களை உன்னிப்பாக ஆராய வேண்டும். மறுசுழற்சிச் செயல்முறைகளுக்கான செலவு அதிகமாக இருக்கும் நிலையில் கழிவு நிர்வாகத்தைப் புதிய வழிகளில் அணுகவேண்டும்,” என்றார் கருத்தரங்கில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
2030ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதத்தை 70 விழுக்காட்டுக்கு அதிகரிக்கும் ‘கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்தின்’ (zero waste masterplan) குறிக்கோளை அடைய இன்னும் சில மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கழிவுகளைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றைக் கடந்த பத்தாண்டுகளில் மக்கள் பின்பற்றுவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகத் தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்புகளின் மறுசுழற்சி விகிதம் கடந்த ஆண்டு 11 விழுக்காடாக நீடித்தது. அதேவேளை, குடியிருப்பு சாரா மறுசுழற்சி விகிதம், 2 விழுக்காடு கூடி 67 விழுக்காடாகப் பதிவானது.
வீடுகளில் மேற்கொள்ளப்படும் மறுசுழற்சி முயற்சிகளிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிந்தது.
இதன் தொடர்பில் வாரியம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், மறுசுழற்சி விகிதம் 78 விழுக்காடாக அதிகரித்தது தெரியவந்தது. 2023ல் அது 72 விழுக்காடாக இருந்தது.
மேலும், ‘சரியான’ முறைகளில் மறுசுழற்சி செய்து வரும் குடும்பங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்தது. ஷாம்பூ போத்தல் ஒன்றை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை ஆய்வில் பங்கேற்றோரில் 92 விழுக்காட்டினர் அறிந்திருந்தனர். 2023ஆம் ஆண்டு அந்த விகிதம் 89 விழுக்காடாக இருந்தது.
இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பானக் கலன்களைத் திரும்பத் தரும் ‘ரிட்டர்ன் ரைட்’ திட்டம் தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக் போத்தல்களையும், உலோகத்தாலான பானக்கலன்களையும் சேகரிக்க, தீவெங்கும் 1,000க்கும் அதிகமான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தேசியச் சுற்றுப்புற வாரியம், 2019ஆம் ஆண்டின் கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்தை மறுஆய்வு செய்து உத்திகளை மதிப்பிடப்போவதாகவும் தெரிவித்தது.


