மனைவி இறந்து பல மாதங்களுக்குப் பிறகு, 52 வயதான ஒருவரின் உடல் அவரது அடுக்குமாடி வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (டிசம்பர் 22) அன்று முற்பகல் 11.55 மணியளவில் பொங்கோல் பிளேஸ் புளோக் 306Aல் உள்ள ஒரு வீட்டில் அழுகிய நிலையில் அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஷின் மின் சீன நாளிதழின் செய்தி கூறியது.
ஷின் மின் நிருபர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டிருந்தன. பல காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.
இறந்தவரின் உறவினர்கள் என்று நம்பப்படும் இரண்டு நபர்கள், சம்பவ இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
இறந்தவரின் சகோதரர்களில் ஒருவர் பிற்பகலில் வந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.
செய்தியாளர்கள் அவரை அணுகியபோது அவர் பேச மறுத்துவிட்டார்.
அருகிலுள்ள ஒரு வீட்டில் புதுப்பித்தல் பணிகளில் இருந்த ஓர் ஊழியர், நண்பகல் வேளையில் காவல்துறையினர் வந்ததாகவும், அந்த நபர் இறந்து நான்கு நாள்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது என்றார்.
மாலை 4 மணிக்குப் பிறகு ஒரு கறுப்பு நிற வாகனத்தில் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அன்று பிற்பகல் 12.05 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.
சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ அதிகாரி அறிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி அந்த மரணத்தில் சூது எதுவும் இல்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை கூறியது.
இறந்தவரும் அவரது மனைவியும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்ததாக அதே மாடியில் வசிக்கும் ஓர் அண்டை வீட்டுக்காரர் கூறியதாக ஷின் மின் தெரிவித்தது.
“கடந்த மாதத் தொடக்கத்தில், நான் அந்த நபருடன் மின்தூக்கியில் சென்றேன். அவர் தனது மனைவி அண்மையில் புற்றுநோயால் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார்,” என்று அந்த அண்டை வீட்டுக்காரர் நினைவுகூர்ந்தார்.

