உற்றார், உறவினர்கள் ஒன்றுகூடிக் களிக்கும் பண்டிகை மகிழ்ச்சிக்கு இணையில்லை. உணவு, புத்தாடை, அலங்காரம் அனைத்தையும் தாண்டி, பலர் ஆவலுடன் எதிர்பார்ப்பது நெருங்கிய உறவுகளுடன் ஒன்றாகத் தீபாவளியைக் கொண்டாடத்தான். குடும்பத்தை விட்டுத் தொலைவில் இருக்கும் சிங்கப்பூரர்களில் சிலர் தீபாவளியை இவ்வாண்டு எப்படி கொண்டாடுகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டது தமிழ் முரசு.
ஆஸ்திரேலியாவில் தீபாவளி
ஆஸ்திரேலியவின் பிரிஸ்பேன் நகரத்தில் குவீன்ஸ்லாந்து காவல்துறை சேவையில் மக்கள் தொடர்பு மேலாளராகப் பணிபுரிந்துவரும் திருமதி ஆர்த்தி ஷம்பசிவன், 50.
“இங்கே தீபாவளிக்கு பொது விடுமுறை கிடையாது. என்றாலும், விடுப்பு எடுத்துத் தீபாவளிக்கான ஏற்பாடுகளைச் செய்வேன்,” என்றார் கடந்த 18 ஆண்டுகளாகத் தீபாவளியை வெளிநாட்டில் கொண்டாடிவரும் திருமதி ஆர்த்தி.
கோயிலுக்குப் போவது, பலகாரங்கள் செய்வது, நண்பர்கள், உறவினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்வது என்று தீபாவளி கொண்டாடும் இவர். பிரிஸ்பேன் மையப் பகுதியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவில் இடம்பெறும் நிகழ்ச்சிககளில் நடன அமைப்பாளராகவும் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறினார்.
பண்பாட்டையும் மரபுகளையும் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அவர், குடும்பப் பாரம்பரியங்களையும் பண்பாட்டு மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்புக்கிடைத்தால் அதைக் கைநழுவவிடக்கூடாது என்பது இவரது கருத்து.
பிஜித் தீவு, இலங்கை மக்களுடன் தீபாவளி
பிரிஸ்பேனில் பிஜித் தீவு, இலங்கை நாடுகளைச் சேர்ந்த தமிழர்களுடனும் தீபாவளியைக் கொண்டாட வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், “பிஜி இந்தியர்கள் பொதுவாகத் தீபாவளியன்று விரதம் இருப்பார்கள். எங்களைப் போல உற்றார் உறவினர்களுடன் ஒன்றுகூடுவது, சாப்பிடுவது, கோயிலுக்குச் செல்வது போன்ற நடைமுறைகள் அவர்களுக்கு மாறுபட்ட அனுபவம்,” என்றார்.
அடுத்தாண்டு தீபாவளியைச் சிங்கப்பூரில் கொண்டாடும் நம்பிக்கையுடன் இருக்கிறார் திருமதி ஆர்த்தி.
முதல் குழந்தையின் முதல் தீபாவளி
முதல் குழந்தையின் முதல் தீபாவளி என்ற மகிழ்ச்சியுடன் தீபாவளியை வரவேற்கக் காத்திருக்கின்றனர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத் தலைநகர் பாஸ்டனில் வசித்துவரும் சுப்பு அடைக்கலவன் - சர்மிலி செல்வராஜி தம்பதியர்.
தொடர்புடைய செய்திகள்
“இரண்டு நாட்களுக்கு முன்தான் தீபாவளி வருகிறது என்ற ஞாபகமே வந்தது. இங்கிருக்கும் இந்தியக் கடைக்கோ, உணவகத்திற்கோ சென்றால்தான் கொண்டாட்ட உணர்வு வரும்,” என்றார் சுப்பு.
“ஹெலோவீன் விழா உணர்வுதான் இங்கு அதிகம் காணப்படுகிறது. இங்கே மத்தாப்புக்கும் பட்டாசுக்கும் தடை. சிங்கப்பூரில் வானொலி, தொலைக்காட்சியென எங்கும் தீபாவளி உணர்வு களைகட்டும். இங்கே நாங்கள் முயற்சியெடுத்தால்தான் தீபாவளி உணர்வைக் கொண்டுவர முடியும்,” என்றார் சர்மிலி.
“இங்கு பலகாரங்கள் விற்கும் கடைகள் இருந்தாலும் வீட்டில் பலகாரம் செய்வதுதான் தீபாவளி உணர்வைத் தருகிறது. இங்கே முறுக்கு மாவு கிடையாது. எல்லாவற்றையும் அடிப்படையில் இருந்து செய்யவேண்டும்,” என சென்ற ஆண்டு தாங்கள் தலைத் தீபாவளி கொண்டாடியதை நினைவுகூர்ந்தனர் தம்பதியர்.
“சிங்கப்பூரில் வானொலிப் படைப்பாளராக இருந்தபோது நிறைய நேயர்களிடம் பேசுவேன். தீபாவளிக்காக நிறைய நிகழ்ச்சிகளும் இடம்பெறும். தீபாவளியன்று வீடுவீடாகச் சென்று உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பதை எண்ணித்தான் ஏக்கமாக உள்ளது,” என்றார் திரு சுப்பு.
“சிங்கப்பூரில் தீபாவளி நள்ளிரவுக்கு சிறிது நேரம் முன்னர்தான் நானும் அக்காவும் தீபாவளிச் சந்தைக்குச் செல்வோம். அதுவே ஒரு தனி உணர்வு. அதை எண்ணிதான் ஏங்குகிறேன்,” என்றார் சர்மிலி.
“காணொளிவழி அழைப்புகள் மிகவும் முக்கியம். நேர வித்தியாசத்தால் தாமதமாகத்தான் எங்கள் குடும்பங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்,” என்றனர் இருவரும்.
நண்பர்களுடன் தீபாவளி
குடும்பத்தைப் பிரிந்து தனியாக வெளிநாட்டில் வசிக்கும்போது நட்பு வட்டத்தை உருவாக்கி, தீபாவளியை கொண்டாடுபவர்களில் ஒருவர் மேற்கு ஆஸ்திரேலியாவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவரும் குமாரி பிரீத்தா.
“நானும் என்னுடைய சகோதர சகோதரிகளும் மணிக்கணக்காக பலகாரங்கள் செய்வோம். தீபாவளியன்று அம்மா எங்களை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வார். நான் எப்போதும் சிணுங்குவேன். இப்போது அதன் அருமை புரிகிறது. அண்ணன் மகளுடனும் அக்கா மகனுடனும் இல்லாததுதான் பெரிய ஏக்கமாக இருக்கிறது,” என்றார் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தீபாவளி கொண்டாடிவரும் குமாரி பிரீத்தா.
முழு நேர வேலைக்கு மாறியதிலிருந்து தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட சிங்கப்பூருக்கு வரும் வாய்ப்புக் கிடைக்காத பிரீத்தாவுக்கு, குடும்பம் போன்ற நெருங்கிய நட்பு வட்டம் அந்த ஏக்கத்தைத் தணிக்கச் செய்கிறது.
“சிறுவயதிலிருந்தே பெற்றோர் பழக்கியபடி, தீபாவளிக்குத் தவறாமல் கோயிலுக்குச் செல்வது, வீட்டில் விளக்கேற்றி வைப்பது போன்ற பாரம்பரியங்களைக் கடைப்பிடித்துவருவதாகக் கூறினார்.
“தீபாவளி அன்று அலுவலகத்தில்தான் இருப்பேன். வேலை முடிந்து குடும்பத்தினருடன் ‘ஃபேஸ்டைமில்’ பேசுவேன். அது அவர்களுடன் இருப்பது போன்ற உணர்வைத் தரும். பலகாரங்கள் சாப்பிட்டு, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவேன்,” என்று தமது தீபாவளி திட்டங்களைப் பகிர்ந்துகொண்டார் குமாரி பிரித்தா.
வீட்டு சமையலுடன் தீபாவளி
முதல்முறையாகத் தமது குடும்பத்தைவிட்டு வெளிநாட்டில் தீபாவளி கொண்டாடுகிறார் எஸ். மெஷ்வந்த் அர்ஜுன், 23.
“இங்கு இந்தியர் அதிகம் இருப்பதால், கொண்டாட்ட உணர்வில் திளைப்பது சுலபமாக உள்ளது,” என்றார் மெஷ்வந்த். தீபாவளி அன்று ‘டூட்’ படத்தைத் திரையரங்கில் நண்பர்களுடன் பார்க்கவும். பிரிட்டனின் மான்செஸ்டர் நகருக்கு சென்று நண்பர்களுடன் ஒன்றுகூடவும் திட்டம் வைத்துள்ளார்.
“அம்மாவின் சமையல், குடும்பத்துடன் இருப்பது, தீபாவளிப் பரபரப்பு, விருந்து எல்லாவற்றையும் நினைத்து ஏக்கம் இருக்கிறது. என்னால் முடிந்த அளவிற்கு சமைப்பேன். அம்மா சமைப்பதுபோல் இல்லாவிட்டாலும், தீபாவளியை வீட்டில் கொண்டாடும் உணர்வைத் தருகிறது,” என்றார் மெஷ்வந்த்.
“சக சிங்கப்பூர் இந்திய மாணவர்களுடன் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஒன்றாகத் தீபாவளியை கொண்டாடுவோம். முடிந்த வரையில் குடும்பத்துடன் தொலைபேசி வாயிலாக இணைவேன்,” என்றார் அவர்.
பண்டிகைகள் நம் அடையாளம்
“உலகத்தின் பல இடங்களில் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு இந்தியரும் தங்கள் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கடைப்பிடித்து வருவதுதான் காரணம்,” என்ற சுப்பு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதை சுட்டினார்.
“நம் முன்னோர்களின் முயற்சியால் இன்று சிங்கப்பூரில் சுதந்திரமாகப் பண்டிகைகளைக் கொண்டாட முடிகிறது. நம்மால் முடிந்த வரையில் இப்பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இது நம்முடைய அடையாளம்,” என்றார் அவர்.
“தீபாவளி என்றாலே புத்தாடைகள், உணவு என்றுதான் தோன்றும். ஆனால் இங்கே தனிமையில் யோசிக்கும்போதுதான், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இணைந்திருப்பதுதான் தீபாவளியென உணருவோம். தனியாக இருக்கும்போது தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். என்றாலும் நம்மால் முடிந்தவகையில் பண்டிகைகளைக் கொண்டாட முயற்சிக்க வேண்டும்,” என்றார் சர்மிலி.