சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் வன்போலி (deepfake) நிர்வாணப் படங்களை, மாணவர்கள் சிலர் உருவாக்கிப் பிறருடன் பகிர்ந்துகொண்டதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிர்வாணமாக உள்ளவர்களைக் காட்டும் படங்களிலும் காணொளிகளிலும் ஒருவரது முகத்தை வேண்டுமென்றே பொருத்தி போலி படங்களையும் காணொளிகளையும் உருவாக்குவதே வன்போலி நிர்வாணம் ஆகும்.
பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை கூறியதன்படி, ஆண் மாணவர்கள் பலர் அடங்கிய ஒரு கும்பல், மாணவிகளின் வன்போலி நிர்வாணப் படங்களை உருவாக்கிப் பகிர்ந்துகொண்டதாக நம்பப்படுகிறது.
பெண் ஆசிரியர்களும் குறிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஒரு பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளி, மனநல ஆலோசனை வழங்கிவருவதாகவும் சொன்னார்.
சம்பவம் குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகப் பள்ளி முதல்வர் ஓங் கிம் சூன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார். இத்தகைய தீங்கிழைக்கும் செயல்களைப் பள்ளி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளி இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் காவல்துறையிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதல் விவரம் ஏதும் தர முடியாது என்றார் அவர்.
படங்கள் யாவும் வன்போலித் தொழில்நுட்பங்கொண்டு உருவாக்கப்பட்ட நிர்வாணப் படங்கள் என்பதை சிஎன்ஏ அறிந்துவந்தது. இதற்கிடையே, சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
சம்பவம் தொடர்பான இணையத்தள இணைப்புகள் காவல்துறைக்குத் தரப்பட்டதாகவும் படங்களைத் தளங்களிலிருந்து அகற்றுவதற்கான கோரிக்கைகளில் அவர்கள் உதவிவருவதாகவும் பெற்றோர்களுக்குப் பள்ளி அனுப்பிய வாட்ஸ்அப் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் காவல்துறை விசாரித்து வருவதாகவும் அவர்களின் கைப்பேசிகளும் இதர சாதனங்களும் தடயவியல் சோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதே குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டது.
பிரம்படி, விளையாட்டு சார்ந்த பயணங்களுக்குத் தடை, பள்ளியிலிருந்தும் பயிற்சியிலிருந்தும் தற்காலிக இடைநீக்கம் போன்ற கட்டொழுங்கு நடவடிக்கைகளைப் பள்ளி தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.