சொத்து விற்பனை பற்றிய கட்டுரையை வெளியிடுவதில் புளூம்பெர்க்கிற்கு உள்நோக்கம் இருந்தது: சண்முகம்

சொத்து விற்பனை பற்றிய கட்டுரையை வெளியிடுவதில் புளூம்பெர்க்கிற்கு உள்நோக்கம் இருந்தது: சண்முகம்

2 mins read
e6713189-d082-4701-b2c7-0d280acc5d09
உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தொடங்கும் நிலையில் உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) உயர் நீதிமன்றக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

காலை 9.30 மணியளவில் டாக்டர் டான் வந்த நிலையில், 15 நிமிடங்கள் கழித்து திரு சண்முகம் வந்து சேர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

‘சிங்கப்பூர் பங்களா வீட்டு உடன்பாடுகளின் ரகசியத்தன்மை அதிகரிப்பு’ என்ற தலைப்பில் கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி புளூம்பெர்க் வெளியிட்ட கட்டுரை தொடர்பிலான வழக்கு அது.

வெளிப்படுத்தல் தேவை இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்தி, சொத்துப் பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையற்ற முறையில் தாங்கள் மேற்கொண்டதாக அந்தக் கட்டுரை தவறாகப் புரிந்துகொண்டது என இரு அமைச்சர்களும் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 2025 ஜனவரி 6ஆம் தேதி அந்த அமெரிக்க ஊடகத்திற்கு எதிராகவும் கட்டுரையின் பின்னணியில் உள்ள செய்தியாளர் திரு லோ டெ வெய்க்கு எதிராகவும் இரு அமைச்சர்களும் தனித்தனியாக வழக்குத் தொடுத்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை திரு லோ 9.10 மணியளவில் நீதிமன்றக் கட்டடத்தில் காணப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது திரு சண்முகம் கூறுகையில், தமது சொத்து விற்பனையை உள்ளடக்கிய உயர்தர பங்களாக்கள் பரிவர்த்தனைகள் பற்றிய கட்டுரையை வெளியிடுவதில் புளூம்பெர்க்கிற்கு உள்நோக்கம் இருந்தது என்றார்.

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை தம்மிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டபோது அவர் அவ்வாறு கூறினார்.

தமது பங்களாவை விற்றது பற்றிய தகவல் பொதுமக்கள் நலன் சார்ந்த ஒரு விஷயமல்ல என்று குறிப்பிட்டார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம்.

குவீன் ஆஸ்ட்ரிட் பார்க் வட்டாரத்தில் உள்ள ஒரு பங்களாவை விற்பனை செய்ய திரு சண்முகம் ஓர் அறக்கட்டளை அமைப்பைப் பயன்படுத்தியதாகவும் பிரிசே பார்க்கில் உள்ள ஓர் உயர்தர பங்களாவை டாக்டர் டான் எச்சரிக்கை அறிவிப்பு ஆவணமின்றி வாங்கியதாகவும் நிலம் சார்ந்த சொத்து ஒப்பந்தங்களின் பிற எடுத்துக்காட்டுகளாக புளூம்பெர்க் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எச்சரிக்கை அறிவிப்பு என்பது, சொத்து வாங்குபவர்கள் ஒரு சொத்தின் மீதான தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்வதற்கும் மற்றவர்கள் அதை வாங்குவதைத் தடுப்பதற்கும் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் சமர்ப்பிக்கக்கூடிய ஒரு சட்டபூர்வ ஆவணமாகும்.

குறிப்புச் சொற்கள்