சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரோன், முதல்நாளான வியாழக்கிழமையன்று பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள லா பா சாட் உணவு நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார்.
அவர்களுடன் அவர்களது துணைவியாரும் இருந்தனர். இரு தம்பதிகளையும் அங்கு வந்தவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
புகைப்படங்கள் எடுப்பதற்காக ஆங்காங்கே நின்று சென்ற அவர்கள் சீ சியோங் ஃபன், சார் குவேத் தியாவ் போன்ற உள்ளூர் உணவுகளையும் சுவைத்துப் பார்த்தனர்.
மெக்ரோன் தம்பதிக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் இரவு விருந்தளித்த பிறகு இந்த நிகழ்வு நடந்தது.
சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், தற்காப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்கும் உடன்பாடுகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு மெக்ரோன் தமது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (மே 30) ஷங்ரிலா மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தவிருக்கிறார்.
இதன்மூலம் இந்த மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தும் முதல் ஐரோப்பிய நாட்டுத் தலைவராக அவர் இருப்பார்.
திரு மெக்ரோனின் இந்த அதிகாரத்துவ பயணம் சிங்கப்பூர், பிரான்சுக்கு இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவைச் சிறப்பிக்கும் விதமாக அமையும் என்று வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மாநாட்டுக்கு பின் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை அதிபர் மெக்ரோன் சந்தித்து இரு நாட்டு நிலவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.