தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்புத் தரப்பு : ரயீசாவின் பேச்சில் முரண்கள்

3 mins read
7ecd9e5a-4776-4a70-860d-d9ae57c4bd33
புதன்கிழமை (அக்டோபர் 16) காலை அரசு நீதிமன்றத்திற்கு வந்த பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாமுன்ற உறுப்பினர் ரயீசா கான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் வழக்கு விசாரணையில், திருவாட்டி ரயீசா கானின் வாக்குமூலங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாகத் தற்காப்புத் தரப்பு தொடர்ந்து கூறுகிறது.

2022ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திருவாட்டி கான் காவல்துறையிடம் பதிவு செய்த வாக்குமூலத்தின் பிரதியைத் தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய், திருவாட்டி கானிடம் காட்டினார்.

அந்த வாக்குமூலத்தின்படி, அந்த விவகாரம் அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கப்படலாம் என்று திரு சிங் திருவாட்டி ரயீசாவிடம் கூறியிருந்தார்.

ஆனால், அந்த விவகாரம் மறுபடியும் தலைதூக்காது என்று சிங் தன்னிடம் கூறியதாகத் திருவாட்டி கான், நீதிமன்றத்தின் முதல் நாள் (திங்கட்கிழமை அக்டோபர் 14ஆம் தேதி) விசாரணையில் சொன்னதைத் திரு ஜுமாபோய் சுட்டினார்.

இரண்டு கூற்றுகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதைத் திருவாட்டி கான் ஒப்புக்கொள்கிறாரா என்று ஜுமாபோய் கேட்டார்.

தொடக்கத்தில் இல்லை என்று தலை அசைத்த திருவாட்டி கான், “என்னைப் பொறுத்தவரையில், ஒரே தகவலை வெவ்வேறு விதத்தில் சொல்வதாக அது உள்ளது,” என்றார்.

ஆயினும், வழக்கறிஞர் ஜுமாபோய் தொடர்ந்து கேள்வி கேட்டபோது திருவாட்டி கான், “ஆம், வேறுபாடுகள் இருப்பதைக் காண்கிறேன்,” என்று கூறினார்.

ஆதாரமற்ற கூற்றுகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று திரு சிங் அக்டோபர் 1ஆம் தேதி அனுப்பிய மின்னஞ்சலில் கவனம் ஈர்க்கும் வகையில் அடிக்கோடிட்டிருந்தார். இருப்பினும், இதன் தொடர்பில் தன்னைத் தவறாகக் கருதமாட்டேன் என்று திரு சிங் இரண்டு நாள் கழித்துக் கூறியதாகத் திருவாட்டி கான் சொன்னதைத் தற்காப்புத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டியது.

“இது மிகவும் அபத்தமானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இது நடந்திருக்காது, அந்த அளவுக்கு அபத்தமானது,” என்றார் திரு ஜுமாபோய்.

அதற்குத் திருவாட்டி கான், “இல்லை,” என மறுத்தார்.

சிங் அந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்லும்படி கூறியதாகக் கருதியதாகத் திருவாட்டி கான் மீண்டும் கூறியபோது, “முன்னுக்குப்பின் முரணாகத் திரு சிங் ஏன் பேசவேண்டும் என்று நியாயமாக யாரும் கேள்வி எழுப்புவர்,” என்று திரு ஜுமாபோய் கூறினார்.

“நான் உண்மை சொல்லவேண்டும் என்று திரு சிங் விரும்பியிருந்தால் பிறகு ஏன் கூடுதலான தயாரிப்புப் பணிகளை அவர் எதிர்பார்க்கவில்லை என்று நியாயமாக யாரும் கேள்வி எழுப்புவர்,” என்று திருவாட்டி கான் பதிலளித்தார்.

“ஆனால் நீங்களோ, ஒன்றும் கேட்கவில்லை அல்லவா?,” என்றார் வழக்கறிஞர் ஜுமாபோய்.

இதற்குப் பதிலளித்த திருவாட்டி கான், தன்னைத் தவறாகக் கருதப்போவதில்லை என்று திரு சிங் கூறியதால் தானும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை என்றார்.

உண்மையைச் சொல்லும்படி திரு சிங், தனக்குக் கட்டளை இடவில்லை என்று நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் திருவாட்டி கான் கூறியதைத் திரு ஜுமாபோய் சுட்டினார்.

“பொய் சொல்வதற்கு உங்களுக்குக் கட்டளை தேவை இல்லை என நினைத்தீர்கள் அல்லவா? பிறகு உண்மையைச் சொல்வதற்கு மட்டும் ஏன் கட்டளை தேவைப்பட்டது?” என்று கேட்டார்.

திருவாட்டி கானிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணை வியாழக்கிழமையன்று மேலும் ஒரு மணி நேரம் விசாரிக்க அரசாங்க வழக்கறிஞர் முன்வைத்த வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் திருவாட்டி கானின் உதவியாளருமான லோ பெய் யிங் விசாரிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றைக் காவல்துறை ஒழுங்காகக் கையாளவில்லை என்று செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி கான் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 25 வயதுப் பெண் ஒருவர் அதுகுறித்துப் புகார் செய்ய காவல்நிலையத்துக்குச் சென்றபோது தாமும் அவருடன் சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய அதிகாரி அவர் அணிந்திருந்த ஆடைகள் பற்றி முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் மதுபானம் அருந்தியிருந்ததைச் சுட்டிக்காட்டியதாகவும் திருவாட்டி கான் கூறினார்.

ஆனால், இதுகுறித்து தாம் பொய் சொன்னதாக அதே ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி ரயீசா கான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்