தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், ஜூலை 14 முதல் 15ஆம் தேதி வரை ஜகார்த்தாவிற்குப் பணி நிமித்தம் பயணம் மேற்கொள்வார்.
அங்கு இருக்கும்போது, அவர் இந்தோனீசியா-சிங்கப்பூர் தற்காப்பு முன்னாள் மாணவர் சங்க முன்னெடுப்பை, இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் ஷாஃப்ரி ஷாம்சூதீனுடன் இணைந்து தொடங்கி வைப்பார் என்று தற்காப்பு அமைச்சு, திங்கட்கிழமை (ஜூலை 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைவர் வைஸ்-அட்மிரல் ஏரோன் பெங், இந்தோனீசியத் தற்காப்புப் படைத் தலைவர் ஜெனரல் அகுஸ் சுபியாந்தோ ஆகியோரும் இந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் இணைத் தலைவர்களாக இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்பார்கள்.
சிங்கப்பூர் ஆயுதப் படைகள் மற்றும் இந்தோனீசிய தேசியத் தற்காப்புப் படைகளைச் சேர்ந்த, சிங்கப்பூர், இந்தோனீசியாவில் இணைந்து பணியாற்றிய அல்லது கல்விப் படிப்பை முடித்த அதிகாரிகளை இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு ஒன்றிணைக்கிறது என்று தற்காப்பு அமைச்சு கூறியது.
இந்தப் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் உருவான தனிப்பட்ட உறவுகளைப் பேணுவதையும் சிங்கப்பூர், இந்தோனீசியா இடையேயான இருதரப்பு தற்காப்பு உறவை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தற்காப்பு அமைச்சு மேலும் கூறியது.
சிங்கப்பூர் ஆயுதப் படைகள் தின வரவேற்பு நிகழ்ச்சியிலும் திரு சான் கலந்துகொள்வதுடன் இந்தோனீசிய அரசாங்கத்தின் பிற தலைவர்களையும் சந்திப்பார்.
அவரது இந்தப் பயணம், சிங்கப்பூர், இந்தோனீசியா இடையேயான வலுவான, நீண்டகால தற்காப்பு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தற்காப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.
2027ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தங்களது 60 ஆண்டுகால தூதரக உறவுகளை நிறைவு செய்யும்.

