சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான ஆக மோசமான எண்ணெய்க் கசிவு சம்பவத்தால் வருமானம் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு விரைவில் கூடுதல் உதவி கிடைக்கலாம்.
வர்த்தகங்களின் செலவு தொடர்பில் உதவ, வாடகையைக் காலந்தாழ்த்திச் செலுத்த அனுமதி போன்ற நடவடிக்கைகளை அரசாங்க அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் ஜூலை 2ஆம் தேதி தெரிவித்தார்.
எண்ணெய்க் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 40 கேள்விகளுக்கு திருவாட்டி ஃபூ, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஆகியோர் தங்களின் அமைச்சுநிலை அறிக்கைகளின்வழி பதிலளித்தனர்.
சம்பவம் நடந்ததும் உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சுத்தப்படுத்தும் பணிகள், பல்லுயிர் மீதான தாக்கம், உணவு மற்றும் தண்ணீர்ப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டது.
இதற்கிடையே, காப்புறுதிக் கோரிக்கைகளை நிறைவேற்ற, பொருளியல் இழப்புகளை மதிப்பிடலாம் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக உள்ள திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.
கடலில் எண்ணெய்யைக் கசியவிட்ட ‘மரின் ஹானர்’ படகுக்கான காப்புறுதி நிறுவனமான ‘பிரிட்டிஷ் மரின்’ நிறுவனம், பாதிக்கப்பட்டோரிடமிருந்து மூன்றாம் தரப்புக் கோரிக்கைகளைப் பெற்றிட வகைசெய்துள்ளதாகக் கூறப்பட்டது.
எண்ணெய்க் கசிவு ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்டதை அடுத்து சிங்கப்பூரின் கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. அதையடுத்து, நீர்முனை வர்த்தகங்கள் தங்களின் வருமானத்திலும் வருகையாளர் எண்ணிக்கையிலும் சரிவைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.
படகுகளை வாடகைக்கு விடும் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகின.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இழப்பீடு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க, வர்த்தகங்கள் தங்களின் இழப்பீடு தொடர்பான விவரங்களைச் சேகரிக்குமாறு திருவாட்டி ஃபூ கூறினார்.
வெவ்வேறு வர்த்தகங்கள் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டன. கடல்சார்ந்த நடவடிக்கைகளை நடத்திவந்த வர்த்தகங்களின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கிப் போயின. சில வர்த்தகங்கள் கடற்கரைகளில் இயங்கிவந்தன. தற்போது எண்ணெய்க் கசிவுக்கு முந்திய நிலையை அவை எட்டியும் விட்டன என்றார் திருவாட்டி ஃபூ.
“வர்த்தகங்களுக்காக நாங்கள் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கையாள முடியாது என்று நினைக்கிறேன். அரசாங்க அமைப்புகள் அந்த வர்த்தகங்களின் நிலைமையை அறிந்துகொள்ள தயாராக உள்ள நிலையில் இயன்ற உதவியை நாங்கள் அளிப்போம்,” என்றார் அவர்.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செந்தோசா, லேப்ரடோர் இயற்கை வனப்பகுதி போன்ற இடங்கள் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள காற்றுத் தரம் பாதுகாப்பான அளவுக்குள் இருப்பதாக திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.
எண்ணெய்க் கசிவால் சிங்கப்பூரின் மீன் பண்ணைகள் பாதிப்புறவில்லை. மேலும், நாட்டின் தண்ணீர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இதுவரை இல்லை.