பொதுப் பேருந்துச் செயல்பாடுகள்: பற்றாக்குறை $852 மில்லியனாகக் குறைந்தது

2 mins read
ஏழு ஆண்டுகளில் ஆகக் குறைவு
3d50d4db-0406-48dc-8aa5-b83975d7f32e
பொதுப் பேருந்துச் செயல்பாடுகளால் ஏற்பட்ட பற்றாக்குறை, ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக $1 பில்லியனுக்குக் கீழ் இறங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவைகளை இயக்குவதில் நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கு ஏற்பட்ட வருடாந்தர பற்றாக்குறை ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக $852 மில்லியனாகக் குறைந்துள்ளது.

பொதுப் பேருந்துச் செயல்பாடுகளால் ஏற்பட்ட பற்றாக்குறை, ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக $1 பில்லியனுக்குக் கீழ் இறங்கியது ஆணையத்தின் ஆக அண்மைய அறிக்கைகளில் தெரியவந்துள்ளது. ஈராண்டுகளுக்கு முன்பு பற்றாக்குறை ஆக அதிகமாக கிட்டத்தட்ட $1.2 பில்லியனாக இருந்தது.

பொதுப் பேருந்துப் பயணங்கள் வழியாக ஆணையம் வசூலித்த கட்டணம் அதிகரித்ததும் இங்கு பேருந்துச் சேவைகளை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போக்குவரத்து நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்ட கட்டணங்கள் குறைந்ததும், பற்றாக்குறை இறங்குமுகம் கண்டதற்குக் காரணம்.

இதன்படி, 2024 மார்ச் 31 நிறைவடைந்த நிதியாண்டுக்கான பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசாங்க மானியங்களுக்குக் குறைவான வரிப் பணம் தேவைப்பட்டது.

2023/2024 நிதியாண்டில் பேருந்துப் பயணங்களிலிருந்து பெறப்பட்ட வருவாய் $898 மில்லியனாகக் கூடியது. அதற்கு முந்திய நிதியாண்டில் பெறப்பட்ட $821 மில்லியன் வருவாயிலிருந்து இது ஏறக்குறைய 9 விழுக்காடு அதிகம்.

தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பேருந்து, ரயில் கட்டணங்கள் அதிகரித்து வந்துள்ளன.

2021ல் நான்கு காசு வரை, 2022ல் ஐந்து காசு வரை, 2023ல் 11 காசு வரை கட்டணங்கள் கூடின. 2024 டிசம்பர் 28 முதல் கட்டணங்கள் 10 காசு வரை இன்னும் உயரவிருக்கின்றன.

இதற்கிடையே, பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்குச் செலுத்தும் சேவைக் கட்டணங்களையும் ஊக்குவிப்புத் தொகையையும் ஆணையத்தால் குறைக்க முடிந்தது.

2023/2024 நிதியாண்டில், போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆணையம் $1.61 பில்லியன் செலுத்தியது. அதற்கு முந்திய ஈராண்டுகளில் அக்கட்டணங்கள் முறையே $1.68 பில்லியனாகவும் $1.65 பில்லியனாகவும் இருந்தன.

அரசாங்க மானியங்களாக $888 மில்லியனைக் கணக்கில் கொண்ட பிறகு, இங்கு பொதுப் பேருந்துச் செயல்பாடுகள் ஒட்டுமொத்த நிகர உபரியாக $36 மில்லியனைப் பதிவுசெய்தன.

2022/2023 நிதியாண்டில் பேருந்துகளுக்கான அரசாங்க மானியங்கள் $1.05 பில்லியனாகவும் அதற்கு முந்திய ஆண்டில் அவை $1.21 பில்லியனாகவும் இருந்தன.

2023/2024 நிதியாண்டில், ஆணையத்தின் மொத்த நடைமுறைச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து, முதன்முறையாக $5 பில்லியனை எட்டியது. எனினும், $2 பில்லியனுக்கு மேலான வருமானத்தால் அது ஈடுசெய்யப்பட்டது.

இதன் விளைவாக, அரசாங்க மானியங்களைச் சேர்ப்பதற்கு முன் ஆணையத்தின் ஒட்டுமொத்த பற்றாக்குறை $2.79 பில்லியனாகக் குறைந்தது. அதற்கு முந்திய நிதியாண்டில் அது $2.91 பில்லியனாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்