ஜூரோங் வட்டார ரயில் பாதையின் முதல் கட்டம் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குப் பதிலாக 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திறக்கப்படும்.
எதிர்பார்த்ததைவிட கட்டுமானப் பணிகள் சவால்மிக்கதாக இருப்பதால் ஜூரோங் வட்டார ரயில் பாதையின் முதற்கட்டக் கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படுவதாகத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு ஜெஃப்ரி இத்தகவலை வெளியிட்டார்.
அதுவரை ஜூரோங் வட்டார ரயில் பாதையை ஒட்டி வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு வசதியாகப் பேருந்துச் சேவைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
குறிப்பாக, தெங்கா வட்டாரத்தை மத்திய சிங்கப்பூர் வட்டாரத்துடன் இணைக்கும் சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
அத்துடன், 2027ஆம் ஆண்டிறுதியில் தற்காலிகமாக இடைவழிப் பேருந்துச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், ஜூரோங் வட்டார ரயில் பாதையில் புதிய ரயில் நிலையம் ஒன்றும் சேர்க்கப்படும்.
அப்புதிய நிலையம் தெங்கா குடியிருப்பாளர்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்யும். அந்நிலையம் 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ரயில் பாதை மேம்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள்
இவ்வாண்டு வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டம், தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் ஐந்தாவது கட்டம், டௌன்டவுன் ரயில் பாதையின் மூன்றாம் கட்ட நீட்டிப்பு ஆகியவை திறக்கப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் அறிவித்துள்ளார்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் மூன்றாம் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.
இது ஜூரோங் லேக் வட்டாரத்திலிருந்து ரயில் பாதையை மேற்கு நோக்கி நீட்டிக்கும் என்று திரு ஜெஃப்ரி தெரிவித்தார்.
செங்காங் வெஸ்ட், சிராங்கூன் நார்த் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு பசுமை ரயில் பாதை குறித்தும் பரிசீலிக்கப்படும்.
மேலும், ஜூரோங் வட்டார ரயில் பாதையின் வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்புக்கான பொறியியல் ஆய்வுகளும் இவ்வாண்டுப் பிற்பகுதியில் தொடங்க இருக்கின்றன.

