போப்பாண்டவர் திருப்பலிக்குச் செல்வோருக்கான இட ஒதுகீட்டுக் குலுக்கல் ஆகஸ்டு 18ஆம் தேதி நள்ளிரவில் முடிவடைந்த பிறகு, அந்நிகழ்ச்சிக்கான 48,600 டிக்கெட்டுகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டு விட்டன என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூருக்கு முதல் முறையாக செப்டம்பர் 12ஆம் தேதி வரும் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் நடத்தும் திருப்பலியில் பங்கேற்பதற்காக பதிவு ஜூன் 24ஆம் தேதி தொடக்கப்பட்டது. அதிகமான மக்கள் அதற்கான பதிந்துகொண்டதன் காரணமாக, ஆகஸ்ட் வரை பதிவு நீட்டிக்கப்பட்டது. அதன் இறுதிக் கட்ட குலுக்கல் ஆகஸ்ட் 18ஆம் தேதி நள்ளிரவோடு முடிவடைந்தது.
ஆகஸ்ட் 5 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாவது குலுக்கலில் 6,000 கூடுதல் டிக்கெட்டுகள் சேர்க்கப்பட்டன. மொத்தம் எத்தனை பேர் டிக்கெட்டுகளுக்குப் பதிவு செய்தனர் எனும் தகவல் வெளியிடப்படவில்லை.
இரண்டாவது குலுக்கலில் தமக்கு ஒரு டிக்கெட் கிடைத்தது பெருமகிழ்ச்சியை அளித்தது என்றார் 59 வயது மோனிக்கா மேக்டலின். அதேவேளையில் தமக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதில் ஏமாற்றம் அடைவதாக ஃபேஸ்புக் பயனாளர் ரேமண்ட் ரபாயல் டான் பதிவிட்டார்.
மொத்த இருக்கைகளில் சுமார் 20 விழுக்காடு, தன்னார்வலர்கள், வெளிநாட்டு ஆயர்கள், பாதிரியார்கள் உட்பட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரில் 32 கத்தோலிக்கத் தேவாலயங்களும் சுமார் 243,000 ரோமன் கத்தோலிக்கர்களும் உள்ளனர்.
போப்பாண்டவரின் சிங்கப்பூர் திருப்பலி நிகழ்ச்சி இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். கூடுதல் விவரங்களுக்கு Pope Francis Singapore 2024 எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.