உணவு விநியோகிப்பாளரான லீ பூன் தியாம், 46, தனது பிறந்தநாளைக் கொண்டாட, வீட்டுக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள், உட்லே மால் கடைத்தொகுதிக்கு அருகே கார் ஒன்றுடன் மோதியது.
சம்பவம், சென்ற திங்கட்கிழமை இரவு 8.14 மணிக்கு அப்பர் அல்ஜுனிட் ரோட்டுக்கும் பிடாடாரி பார்க் டிரைவிற்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்தது.
சுயநினைவற்ற நிலையில் ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
திரு லீக்காக குடும்பத்தினர் பிறந்தநாள் விருந்துடன் காத்திருந்ததாக அவரின் மூத்த மகன் ஷின் மின் நாளேட்டிடம் கூறினார்.
வழக்கமாக மாலை 5 அல்லது 6 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பும் திரு லீ அன்று கூடுதல் நேரம் வேலை செய்வதாக குடும்பத்தினர் நினைத்திருந்த வேளையில் இரவு 8.30 மணியளவில் விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
திரு லீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு அவர் மாண்டதாகக் கூறப்பட்டது.
இவ்விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டிய 38 வயது ஆடவர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

