தயார்நிலை, மேம்பாடுகளை ஆலோசித்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாநாடு

இருமடங்கிற்குமேல் உயர்ந்த செயற்கை நுண்ணறிவிற்கான தேவை

2 mins read
706b1b17-e163-4992-b1a3-5fe38bdaead4
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பும், அரசாங்கமும், நிறுவனங்களும், தொழிலாளர்களும் வரவிருக்கும் மாற்றங்களைச் சமாளித்து, எதிர்காலத்திற்குத் தயாராக ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் டேவிட் நியோ கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த மூன்றாண்டுகளில் (2022-2025) செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்கான தேவை இருமடங்கிற்குமேல் உயர்ந்துள்ளது.

இது அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் வளர்ந்துள்ளதையும், ஊழியர்கள் அதற்கேற்ப மாறவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாக கலாசார, சமூக, இளையர் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டேவிட் நியோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடிப்படைத் திறன்களான தீர்வுத் திறன், தொடர்புத் திறன் உள்ளிட்டவற்றுக்கான தேவையும் தொடர்ந்து நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாறிவரும் உலகில் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் நோக்கில் ‘பாடநெறி ஒப்புதல் திறன் பட்டியலை’ ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் வெளியிட்டுள்ளது.

அப்பட்டியல் குறித்தும், அதற்கேற்ப ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கட்டமைப்பில் மேம்பாடுகள் நடைபெறுவது குறித்தும் பயிற்சி, பெரியோர்களுக்கான கல்வி மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் நியோ விளக்கினார்.

“தேவை உள்ள திறன்களின் பட்டியல், கற்பவர்களும் பயிற்சி வழங்குநர்களும் எதிர்காலத்திற்குத் தயாராக உதவும்,” என்றார் திரு நியோ.

திறன்கள் குறித்த தெளிவு, அவற்றை உரியவர்களிடம் தெரிவிப்பது, மாறிவரும் உலகிற்கு ஊழியர்களை நம்பிக்கையுடன் தயார்ப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டினார்.

2025 - முக்கியமான, தேவையுள்ள திறன்கள்

மொத்தம் 38 திறன் கட்டமைப்புகளில் உள்ள 2,000 பணிகளுக்குத் தேவைப்படும் 37,000 முக்கிய வேலைகளைப் பகுப்பாய்வு செய்து, சிங்கப்பூர் முழுவதும் தேவை உள்ள திறன்களை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பட்டியலிட்டுள்ளது.

எல்லாத் துறைகளிலும் ஏறத்தாழ கால்வாசிப் பணிகளை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மேற்கொள்ள முடிவதாக ஆய்வு கூறியது.

பல்வேறு பணிகள் தானியக்கமயமாகும் நிலையிலும், முடிவெடுக்கும் திறன், தன்மேலாண்மை ஆகிய மனிதத் தலையீடு தேவைப்படும் திறன்களும் அதிக மதிப்புமிக்கதாக மாறக்கூடும் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கூறியது.

“தேவை உள்ள திறன்களையும் வளர்ந்து வரும் திறன் போக்குகளையும் புரிந்துகொள்வதன் மூலம் தனிமனிதர்கள், நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள் ஆழமான நுண்ணறிவுகளைப் பெறலாம். இது ஒரு வழிகாட்டியாக அமைகிறது. வேலைவாய்ப்பு, திறன்களுக்கான களம் இன்று மிகவும் அதிவேகமாக மாறி வருகிறது. இத்தகைய சூழலைத் தனிமனிதர்களும் நிறுவனங்களும் எளிதாகக் கையாளுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவே பல வேலைத் திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை எங்களது இணையத்தளத்தில் உள்ள தகவல் முகப்பு (Dashboard) மூலம் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்,” என்று வேலைத் திறன் நுண்ணறிவுப் பிரிவின் துணை இயக்குநர் லலிதா மணியம், 46, விளக்கினார்.

பயிற்சி, பெரியோர்களுக்கான கல்வி மாநாடு

‘சிறப்பான தொடர்கல்வி, பயிற்சியை நோக்கிய ஒன்றிணைவு’ எனும் கருப்பொருளில் நான்காவது ஆண்டு பயிற்சி, பெரியோர்களுக்கான கல்வி மாநாடு மரினா பே சாண்ட்ஸ் மாநாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஊழியர் மேம்பாட்டுக்கும், பயிற்சித் தரத்தை வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தொடர்ந்து, புதிய பாடத்திட்டங்களுக்கான அங்கீகார வழிமுறைகள், நிதி உதவியைப் புதுப்பிப்பிற்கான புதிய நிபந்தனைகள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் ஏறத்தாழ 450 தொழில்துறைத் தலைவர்கள், பயிற்சி வழங்குநர்கள், மனிதவள வல்லுநர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தேவையுள்ள திறன்களின் பட்டியலையும், செயற்கை நுண்ணறிவின் மூலம் தானியக்கமயமாக்குவதற்கான திறன்கள் குறித்தும் அமைப்பின் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்