மறதிநோய் சமூகத் திட்டம் ஏழு நிலையங்களுக்கு நீட்டிப்பு

மறதிநோய் சமூகத் திட்டம் ஏழு நிலையங்களுக்கு நீட்டிப்பு

2 mins read
5956acc0-4bde-47f7-a42b-a302f9a8d3d2
சிஐபி திட்டம் இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ள நிலையங்களில் ஒன்றான என்டியுசி ஹெல்த். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த அளவிலிருந்து நடுநிலை அளவு மறதிநோய் உள்ளவர்களுக்கான சமூக ஆதரவுத் திட்டம் ஒன்று தீவு முழுவதும் ஏழு நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2028ஆம் ஆண்டுக்குள் 1,200க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு ஆதரவளிப்பது இந்நடவடிக்கையின் இலக்கு.

அறிவாற்றல் மங்குவதைத் தடுக்கும் திட்டத்தை (Cognitive Intervention Programme (CIP)) ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு தொடங்கியது. முதல் கட்டமாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரு நிலையங்களில் 120க்கும் அதிகமானோரைக் கொண்டு சோதிக்கப்பட்டதையடுத்து திட்டம் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.

வாரந்தோறும் அமர்வுகள் மூலம் வழங்கப்படும் இரண்டு மாத காலத் திட்டத்தில் பங்கேற்றோரில் 85 விழுக்காட்டினருக்கும் மேலானோரின் உணர், அறிவாற்றல் திறன் மதிப்பீடுகள் அதே நிலையில் இருந்தன அல்லது மேம்பட்டன. தங்களின் மனநிலை மேம்பட்டதாக 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து சிங்கப்பூர் மறதிநோய் அமைப்பு நடத்தும் நோங்-என் பராமரிப்பு நிலையம், என்டியுசி ஹெல்த் ஆகியவற்றில் சிஐபி திட்டம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஆரம்ப சோதனைக் கட்டத்தில் சிங்கப்பூர் மறதிநோய் அமைப்பும் ஈடுபட்டிருந்தது.

பங்கேற்பாளர்கள் தங்களின் அறிவாற்றல் திறன், உடல்ரீதியான ஆற்றல், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவற்றை அதே நிலையில் வைத்திருக்க அல்லது மேம்படுத்திக்கொள்வதற்கான திட்டமிடப்பட்ட, பன்முக நடவடிக்கைகளையும் சிஐபி திட்டம் வழங்குகிறது.

ஒவ்வொரு பங்கேற்பாளரின் ஆற்றல், விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. நினைவாற்றலுக்கான விளையாட்டுகள், நடனம், ஓவியக் கலைகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

ஒவ்வோர் அமர்விலும் பயிற்சி பெற்ற ஊழியர் ஒருவர், அதிகபட்சமாக நான்கு பங்கேற்பாளர்களைக் கவனித்துக்கொள்வார்.

ஏழு வாரங்களுக்கு திட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மூன்று மணிநேரம் நீடிக்கும் இரு அமர்வுகள் இருக்கும்.

பிறகு தங்கள் ‘நிலை’யைத் தக்க வைக்க பங்கேற்பாளர்கள் 26 வாரங்களுக்கான கூடுதல் அமர்வுகளைத் தெரிவுசெய்துகொள்ளலாம். தொடக்கத்தில் பெற்ற மேம்பாட்பைத் தக்க வைத்துக் கொள்ள உதவ இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தை நிறைவேற்றியவர்கள் பரிசோதிக்கப்பட்டு அவரவருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். அதோடு, சுகாதாரப் பராமரிப்பாளர்கள் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பர்.

சிங்கப்பூர் சமூகம் மூப்படைந்துவரும் நிலையில் மறதிநோய்ச் சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்தும் வருகின்றன. இத்தகைய சூழலில் இந்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.

60 வயதைத் தாண்டியோரில் கிட்டத்தட்ட 74,000 பேர் 2023ஆம் ஆண்டு முதல் மறதிநோயுடன் வாழ்ந்து வருவதாக மனநலக் கழகம் நடத்திய ‘சிங்கப்பூர் மூத்தோரின் நலன்’ எனும் ஆய்வில் தெரிய வந்தது. இந்த எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் 152,000க்கு அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சு கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்