சிங்கப்பூரில் எல் நினோ காலநிலை மாற்றத்தால் வெப்பமான, வறண்ட வானிலை நிலவி வரும் வேளையில், சில தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் நாள்பட்ட சில உடல்நலப் பாதிப்புகளும் மோசமடையக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
எல் நினோ நேரடியாக நோயை உண்டாக்காது என்றாலும், டெங்கி போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் பரவுவதற்குச் சாதகமான சூழலை அது உருவாக்கக்கூடும்.
வெப்பமான வானிலை காரணமாக மக்கள் அதிகமாகக் குளிரூட்டப்பட்ட இடங்களுக்குள் இருக்க நேரிடலாம். அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலால், ஆர்எஸ்வி உள்ளிட்ட சுவாசத் தொற்றுகள் பரவுவது அதிகரிக்கக்கூடும்.
இந்த எல் நினோ சூழல் அக்டோபர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் எதிர்பார்க்கிறது.
எல் நினோவின்போது நிலவும் அதிக வெப்பம் ஏடிஸ் கொசுக்களின் வாழ்க்கைச் சுழற்சியை விரைவுபடுத்தும். அதோடு, கொசுக்களின் உடலுக்குள் கிருமிகள் பெருகுவதற்கான நேரத்தையும் குறைக்கும்.
இதனால் டெங்கி, சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் தொற்றுகள் இந்தக் காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தொற்றுநோய் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தொற்றுநோய்களைத் தவிர, எல் நினோ காற்றின் தரத்தைக் கெடுப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

