சிங்கப்பூரில் ஜூலை முதல் செப்டம்பர் வரை 874 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய காலாண்டில் பதிவான 1,361 சம்பவங்களை விட 35.8 விழுக்காடு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட தேசிய சுற்றுப்புற வாரியத்தின் காலாண்டு டெங்கி கண்காணிப்புத் தரவுகளின்படி, முந்தைய மூன்று மாதங்களில் நிகழ்ந்த இரண்டு மரணங்களுடன் ஒப்பிடும்போது, அண்மைய காலாண்டில் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.
மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை, டெங்கி அதிகம் பரவும் 80 பகுதிகளை வாரியம் அடையாளம் கண்டுள்ளது. இது ஏப்ரல் முதல் ஜூன் வரை அடையாளம் காணப்பட்ட பகுதிகளைவிட 37 விழுக்காடு குறைவு. அடையாளம் காணப்பட்ட 80 பகுதிகளில் 72 பகுதிகள் அதே காலகட்டத்தில் டெங்கி அதிகம் பரவும் பகுதிகள் என்ற நிலையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.
அண்மைய காலாண்டில் வாரியத்தால் கண்டறியப்பட்ட கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அந்த வகையில், அடையாளம் காணப்பட்ட 3,700க்கும் மேற்பட்ட பகுதிகள் முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது சுமார் 34 விழுக்காடு குறைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, 2025ஆம் ஆண்டில், அக்டோபர் 11 வரை டெங்கி பாதிப்புகள் குறைவாக உள்ளன. 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2025ல் 3,527 பாதிப்புகள் என்றும் இந்தப் பாதிப்பு 2024ல் 12,476 ஆக இருந்தது என்றும் சுகாதார அமைச்சின் அண்மைய வாராந்தர தொற்று நோய் அறிக்கை தெரிவிக்கிறது.
மே முதல் அக்டோபர் வரையிலான வெப்பமான மாதங்களில் சிங்கப்பூரில் டெங்கிப் பரவல் அதிகமாக இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்பு கூறியது. ஏடிஸ் கொசு இனப்பெருக்கத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் கொசுக்களிடையே டெங்கி கிருமி வேகமாகப் பெருகுவது ஆகியவை இதற்கான காரணங்கள்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் முயற்சிகளில் வோல்பாக்கியா திட்டமும் ஒன்றாகும். இது வோல்பாக்கியா கொசுக்கள் வெளியிடப்பட்ட பகுதிகளில் டெங்கி தொற்றும் அபாயத்தை சுமார் 75 விழுக்காடு குறைத்துள்ளது.

