புதிய எம்ஆர்டி ரயில்களை சேவையில் இணைக்கும் பணி நிறைவு

புதிய எம்ஆர்டி ரயில்களை சேவையில் இணைக்கும் பணி நிறைவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Sep 2026 - 8:26 pm

1 mins read

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளுக்கான ஏழாம் தலைமுறை ரயில்களைச் சேவையில் இணைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்தது.

புதன்கிழமை (செப்டம்பர் 30) முதல் இந்தத் தலைமுறையின் கடைசி ரயில் சேவைக்கு வந்ததைத் தொடர்ந்து அப்பணி நிறைவடைந்தது. சிங்கப்பூரின் மிகப் பழைமையானதும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதுமான அந்த இரு ரயில் பாதைகளையும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் இயக்கி வருகிறது.

‘ஆல்ஸ்டம் மோவியா ஆர்151’ ரயில் தொகுதியின் 10வது ரயிலை நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 30) எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

1987ஆம் ஆண்டில் இந்த இரு ரயில் பாதைகளும் தொடங்கப்பட்டதிலிருந்து சேவையில் இருந்துவந்த முதலாம் தலைமுறை ‘கவாசாக்கி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்’ ரயில்களுக்குப் பதிலாகப் புதிய ‘ஆர்151’ ரயில்களை வாங்குவதற்கு, நிலப் போக்குவரத்து ஆணையம் 2018ஆம் ஆண்டில் $1.2 பில்லியன் ஒப்பந்தம் செய்தது. அதன்மூலம் 106 புதிய ஆர்151 ரயில்களில் 66 ரயில்கள் வாங்கப்பட்டன.

ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட அந்தப் புதிய ஆர்151 ரயில்கள், சீனாவின் சாங்சூன் நகரில் உருவாக்கப்பட்டன.

இந்தப் புதிய ரயில்களில் இயந்திரக் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறியும் வசதிகளும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் நவீனப் பரிசோதனை முறைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பயணிகள் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கையைக் குறைக்காமல், அதிகமானோர் பயணம் செய்யும் வகையில் ரயில் பெட்டிகளில் அதிக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக அகலமான சன்னல்களும் சாய்விருக்கைகளும் மேம்படுத்தப்பட்ட பிற வசதிகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டிரயில்எஸ்எம்ஆர்டி