தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விவோசிட்டி, ஹார்பர்ஃபிரண்ட் கூடங்களில் தீ: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளையர்

2 mins read
497c0d79-1060-4260-bc77-11dbc6467b9c
19 வயது யோகே‌‌ஷ் பூபாலன் பூபாலன், குறும்புத்தனமாக இரண்டு குற்றங்கள் புரிந்ததை ஒப்புக்கொண்டார். அந்தக் குற்றங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 3) நிரூபிக்கப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விவோசிட்டி, ஹார்பர்ஃபிரண்ட் கடைத்தொகுதிகளில் நிறுவப்பட்டிருந்த தற்காலிகக் கூடங்களுக்குத் தீ மூட்டியவர் செய்த குற்றங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 3) நிரூபிக்கப்பட்டுள்ளன.

தீ மூட்டிய சம்பவங்களில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு $27,000க்கும் அதிகம்.

19 வயது யோகே‌‌ஷ் பூபாலன் பூபாலன், குறும்புத்தனமாக இரண்டு குற்றங்கள் புரிந்ததை ஒப்புக்கொண்டார். அத்தகைய மேலுமொரு குற்றச்சாட்டு, தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும்.

இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி இரவு, விவோசிட்டியில் மனவருத்தத்தோடு நடந்துசென்றபோது, கூடங்களுக்கு நெருப்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதாகக் கூறப்பட்டது.

அன்றிரவு மணி 11.10க்கு, கடைத்தொகுதியின் முதல் தளத்தில் போலோ கடைக்கு வெளியே இருந்த போலோ ரால்ஃப் லாரென் (Polo Ralph Lauren) தற்காலிகக் கூடம் மூடப்பட்டிருந்தது.

யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த யோகே‌‌ஷ், தீ மூட்டும் கருவியை எடுத்து, கூடத்தின்மீது போர்த்தப்பட்டிருந்த கறுப்புத் துணிக்குத் தீ வைத்தார். பின்னர் நெருப்புப் பரவுவதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் யோகே‌‌ஷ்.

அருகில் சென்றுகொண்டிருந்தவர்கள், தீயை அணைத்தனர். அதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு $17,000க்கும் அதிகம்.

இரவு 11.20க்கு, ஓ!சன்னி தற்காலிகக் கூடத்தைக் கண்ட யோகே‌‌ஷ், அதற்கு நெருப்பு வைத்தார். கூடத்திற்கு ஏறக்குறைய $900 சேதம் உண்டானது.

பின்னர் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தின் முதல் தளத்தில் முற்றத்தில் அமைந்திருந்த ரீஃபா‌‌ஷ் தற்காலிகக் கூடத்திற்கு இரவு 11.40க்குத் தீ மூட்டினார். அதற்குப் பக்கத்திலும் நின்று நெருப்புப் பரவுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார் யோகே‌‌ஷ்.

அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் எச்சரிக்கைப் பொத்தானை இயக்கியதும், தீ அணைக்கப்பட்டது. துணிகளுக்கும் துணிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த சட்டங்களுக்கும் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு $9,000க்கும் மேல்.

யோகே‌‌ஷ் மார்ச் 20ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். மனநலக் கழகத்தில் அவருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

கடும் மனச்சோர்வாலும் எண்ணச் சுழற்சிப் பிரச்சினையாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர் ஒருவர் கூறினார். குற்றம் புரிந்தபோது அவை தலைதூக்கியிருக்கக்கூடும் என்று மருத்துவர் சொன்னார்.

அரசாங்க வழக்கறிஞர் கார்ல் டான், அவை கடுமையான குற்றங்கள் என்றார். ஆனால் யோகே‌‌ஷ், இளையர் என்பதாலும் குற்றம் புரிந்தபோது நலமின்றி இருந்ததாலும் நன்னடத்தைக் கண்காணிப்புக்கும் கட்டாய மருத்துவ சிகிச்சைக்கும் தகுதியானவாரா என்பதை மதிப்பிடும் அறிக்கையை அரசாங்கத் தரப்புக் கோரியிருப்பதாக அவர் சொன்னார்.

யோகே‌‌ஷ், மீண்டும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 19ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவார். அன்று வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் அவருக்கு மூன்று மாதம் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்