மனநலிவிலும் பெருந்துணிவு

2 mins read
b92474dc-d9b1-47d0-8f52-6abbc4a6c0a1
‘மைண்ட்ஸ்’ அமைப்பின் திரைப்பட விழாவின்போது திரையிடப்பட்ட ஒரு படத்தைக் காணச் சென்றனர் திரு மதுசூதனன் பிள்ளை, மகள் டான்யா பிள்ளை. - படம்: மைண்ட்ஸ்

காலை நேரப் பரபரப்புக்கு இடையே சிறிய உருவில் பெண் ஒருவர், அமைதி கலந்த நம்பிக்கையுடன் லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள தம் வேலை இடத்திற்குச் செல்வதைச் சிலர் பார்த்திருப்பர்.

‘டவுன் சிண்ட்ரம்’ எனப்படும் மனநலிவுக் குறைபாட்டுடன் பிறந்த டான்யா பிள்ளைக்கு, தற்போது 36 வயது. ஹோட்டல் ஒன்றில் சமையலறை உதவியாளராகப் பணியாற்றும் இவர், சுவா சூ காங்கிலுள்ள தம் வீட்டிலிருந்து சுயமாக வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.

கிடைத்த வேலையைக் கண்ணியத்துடன் செய்து வரும் இவர், ஆர்வம் குறையாது தமது தன்னம்பிக்கையையும் நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறார்.

சிறுவயது முதல் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த டான்யாவுக்குக் கற்றல் தாமதமாக இருந்தது. சுற்றியிருப்போர், குறிப்பாகத் தாய் தந்தையரும் டான்யாவின் பயிற்றுவிப்பாளர்களும் நல்கிய ஆதரவு டான்யா சுயமாகப் பிழைப்பதற்கு உதவியது.

மூன்று பிள்ளைகளில் மூத்தவரான டான்யா, தமக்குப் பிடித்த வேலையைச் செய்து ஓய்வு நேரங்களில் பாடல் கேட்டு குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்கிறார்.

“எனக்கு வேலைக்குச் செல்ல பிடிக்கும். வருங்காலத்தில் கேக்குகளையும் பிஸ்கட்டுகளையும் செய்ய எனக்கு ஆசை,” என முகத்தில் தெளிவுடன் கூறினார் அவர்.

பேராற்றல் நிறைந்த டான்யாவின் வாழ்க்கை போன்ற பலரது கதைகள், அறிவுப்புலன் குறைந்தோருக்கான ‘மைண்ட்ஸ்’ அமைப்பின் திரைப்பட விழாவின்போது கொண்டாடப்படுகின்றன.

சிங்கப்பூர்த் திரைப்படச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த வருடாந்திர விழா, செப்டம்பர் 13 முதல் 22 வரை நீடிக்கும். ஏழு திரைப்படங்களைத் திரையிடும் இந்த விழாவில், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ‘ஷா தியேட்டர் லீடோ’ அரங்கில் ‘பாப்பி’ (Poppy) என்ற நியூசிலாந்துத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

இந்தத் திரையிடுதலுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி வருகையளித்தார்.

சிறப்புத் தேவையுடைவர்களின் தனித்தன்மையையும் மீள்திறனையும் கொண்டாடும் இந்த விழாவிற்கு, மனநலிவு உள்ளவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களும் பொதுமக்களும் அரங்கில் ஒன்றாக அமர்ந்து படத்தை ரசித்தனர்.

திரைப்படத்தைக் காண டான்யாவுடன் வந்திருந்த அவரின் தந்தை மதுசூதனன் பிள்ளை, தம் மகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவதாகக் கூறினார்.

“டான்யா, சுயக்கட்டுப்பாடும் கட்டொழுங்கும் மிக்கவர். நான் எதிர்ப்பார்த்ததைவிட சுயமாகச் செயல்படும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஆடைகளை உடுத்துவது முதல் ஸூம்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது வரை அவர் தம் வாழ்க்கையைக் கட்டுக்கோப்புடன் நடத்தி வருகிறார்,” என்றார் திரு மதுசூதனன்.

குறிப்புச் சொற்கள்