ஏப்ரல் 12 - 17 அமெரிக்கா செல்கிறார் துணைப் பிரதமர் கான்

இவ்வாண்டு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 60 ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில், அந்தப் பயணம் இடம்பெறுகிறது

ஏப்ரல் 12 - 17 அமெரிக்கா செல்கிறார் துணைப் பிரதமர் கான்

2 mins read
7942b2bc-380a-4e41-8967-da05eb5a54f0
இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 17 வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இவ்வாண்டு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு அறுபது ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில், அந்தப் பயணம் இடம்பெறுகிறது.

வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், வாஷிங்டனுக்குச் செல்வதற்கு முன்னர், டெக்சசின் ஆஸ்டின் நகருக்கும் செல்வார்.

ஆஸ்டினில் அவர் மாநிலத் தலைவர்களைச் சந்தித்து சிங்கப்பூருக்கும் டெக்சஸ் நிறுவனங்களுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்துக் கலந்துபேசுவார் என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

“திரு கான் தனியார் துறைப் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு, என்டர்பிரைஸ் சிங்கப்பூரின் புதிய ஆஸ்டின் வெளிநாட்டு நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைப்பார்.

அந்த நிலையம், அமெரிக்காவுக்குள் கால்பதிக்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் என்று அறிக்கை கூறியது.

அந்த நிலையம் அமெரிக்காவில் என்டர்பிரைஸ் சிங்கப்பூரின் நான்காவது வெளிநாட்டு நிலையமாகும். மற்ற மூன்று, லாஸ் ஏஞ்சலிஸ், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ளன.

திரு கான் ஏப்ரல் 14ஆம் தேதி வாஷிங்டனுக்குச் செல்வார். அங்கு, அவர் அமைச்சர்களையும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திப்பார்.

திரு கான், சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மறு உறுதிப்படுத்தி, மேலும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான அம்சங்கள் குறித்துக் கலந்துபேசுவார் என்று அமைச்சு கூறியது.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் இருக்கும் திரு கான், அனைத்துலகப் பண நிதியத்தின் அனைத்துலக பண, நிதிக் குழுவின் பொது அமர்விலும் கலந்துகொள்வார்.

வர்த்தக, தொழில் அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் திரு கானுடன் பயணம் மேற்கொள்வார்கள்.

குறிப்புச் சொற்கள்