வர்த்தக, தொழில்நுட்ப உறவை வலுப்படுத்த அமெரிக்கா செல்லும் துணைப் பிரதமர் கான்

1 mins read
973f808d-a7ff-404f-ba6b-d54b0baa96cc
ஜூலை 21ஆம் தேதி நியூயார்க்கில் தனது பயணத்தைத் தொடங்கும் துணைப் பிரதமர் கான், பின்னர் வாஷிங்டனுக்குச் செல்வார். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

“இந்தப் பயணம் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான, பன்முக பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்பவும் பராமரிக்கவும் உதவும். இதில் கணிசமான, பரஸ்பர நன்மை பயக்கும் பொருளியல், வர்த்தக உறவும் அடங்கும்,” என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஜூலை 18 அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

ஜூலை 21ஆம் தேதி நியூயார்க்கில் தனது பயணத்தைத் தொடங்கும் துணைப் பிரதமர் கான், பின்னர் வாஷிங்டனுக்குச் செல்வார்.

இந்தப் பயணத்தின்போது, அவர் அமெரிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, நிதிச் சமூகங்களின் தலைவர்கள் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

அமெரிக்க வர்த்தகச் சபை நடத்தும் வர்த்தக வட்டமேசை மாநாட்டிலும் திரு கான் பேசுவார். அங்கு அவர் அனைத்துலக, வட்டார பொருளியல் முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றுவார். மேலும் அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான அம்சங்களை விவரிப்பார்.

வர்த்தக தொழில் அமைச்சு, வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் துணைப் பிரதமருடன் செல்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்