தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோலில் துணைப் பிரதமர் கான் - ஹர்பிரீத் சிங் போட்டி

3 mins read
34f1b185-240b-47ff-8016-332c8804b26c
துணைப் பிரதமர் கான் கிம் யோங், மக்கள் செயல் கட்சி சார்பில் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர் அணியைத் தேர்தலில் வழிநடத்துகிறார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பாட்டாளிக் கட்சியின் ஹர்பிரீத் சிங் நேஹால் வழிநடத்தும் அணி. 
பாட்டாளிக் கட்சியின் ஹர்பிரீத் சிங் நேஹால் வழிநடத்தும் அணி.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்பாராத திருப்பமாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங், மக்கள் செயல் கட்சியின் பொங்கோல் குழுத்தொகுதிக்கான வேட்பாளர் அணியைப் பொதுத் தேர்தல் 2025ல் வழிநடத்துகிறார்.

அந்த அணியைத் தேர்தல் களத்தில் சந்திக்கவுள்ளது பாட்டாளிக் கட்சியின் ஹர்பிரீத் சிங் நேஹால் வழிநடத்தும் அணி.

பொங்கோலுக்கான மசெக அணியில் யாரெல்லாம் போட்டியிடுவர் என்று பல நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி திரு கான் முற்றுப்புள்ளியிட்டார்.

சுவா சூ காங் அணிக்குத் தலைமை தாங்குவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான்கு வேட்பாளர்கள் கொண்ட பொங்கோல் குழுத்தொகுதியில் அவர் களமிறங்கியுள்ளார்.

அவரது தலைமையில் தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, 52, உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், 45, பொங்கோல் குழுத்தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங், 48, ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று நடந்த வியப்புக்குரிய திருப்பங்களில் திரு கான் தொகுதி மாறியதும் ஒன்று. அவருக்குப் பதில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மசெகவின் சுவா சூ காங் அணியை வழிநடத்துகிறார்.

அமைச்சர் டான், மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியிலிருந்து சுவா சூ காங் சென்றதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

பாட்டாளிக் கட்சியின் ‘நட்சத்திர வேட்பாளராகக்’ கருதப்படும் திரு சிங், பொங்கோல் குழுத்தொகுதியில் புதுமுகங்கள் ஜெக்சன் ஆவ், 35, சித்தி ஆலியா அப்துல், 43, அலெக்ஸிஸ் டாங், 39, மூவருடன் களமிறங்குகிறார்.

வியக்கத்தக்க மாற்றமாகப் பாட்டாளிக் கட்சி தனது புகழ்பெற்ற வேட்பாளர்களைப் பொங்கோல் மற்றும் தெம்பனிஸ் அணிகளில் களமிறக்கியுள்ளது.

மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில், பாட்டாளிக் கட்சி போட்டியிடாததற்குக் குடியிருப்பாளர்களின் புரிதலை நாடுவதாகத் தெரிவித்தார் அக்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்.

“பொதுத் தேர்தல் முடிவுற்ற பிறகும் நாங்கள் அங்கு எங்கள் பணியைத் தொடர்வோம்,” என்றார் அவர்.

இறுதிவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இருதரப்பு வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் புதன்கிழமை யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் அறிவிக்கப்பட்டன.

வரும் தேர்தல் சிங்கப்பூரின் எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும் என்று திரு கான் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

“பொருளியல், வேலைவாய்ப்புகளில் ஆபத்து போன்ற சவால்களை எதிர்கொள்கிறோம். இருப்பினும் ஒன்றுபட்டால் இந்தச் சவால்களைச் சமாளிக்கலாம் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

பொங்கோல் குழுத்தொகுதிக்குப் புதிய வேட்பாளராக இருந்தாலும் விரைவில் தேவையானவற்றை கற்றுக்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

“பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்கு நல்ல வேலைவாய்ப்புகளைக் கொண்டுவருவதோடு, போக்குவரத்துச் சமிக்ஞைகளைச் சமாளித்து வட்டாரத்தைச் சுத்தமாக வைத்திருப்போம்,” என்றார் திரு ஜனில்.

பாட்டாளிக் கட்சியைப் பிரதிநிதித்து பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிட தமக்கும் தமது சக வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாய்ப்பு ‘வாழ்நாள் பேறு’ என்று கூறினார் திரு சிங்.

கட்டுப்படியாகக்கூடிய விலைவாசி, சிறந்த கல்வி முறை, நியாயமான அரசியல் மற்றும் தங்கள் குரல் கேட்கப்படும் ஒரு நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பொங்கோல் குழுத் தொகுதியின் 120,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 21 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட தரவுகள் சுட்டிக்காட்டின.

‘மில்லேனியல்’ மற்றும் ‘ஜென் ஸி’ வாக்காளர்கள் குழுத்தொகுதியில் உள்ள மற்ற வயதினரை விட, 10 விழுக்காட்டிற்கும் அதிகமான வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மட்டுமே இதற்கு முன்பு பாட்டாளிக் கட்சி போட்டியிட்டது. 2020 பொதுத் தேர்தலில் தனித்தொகுதி வேட்பாளர் டான் சென் சென், சுன் ஷுவெலிங்குக்கு எதிராக 39.02 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

பொங்கோல் குழுத் தொகுதியில் முன்னாள் பாசிர்-ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியைச் சேர்ந்த 96,825 வாக்காளர்களும் பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியைச் சேர்ந்த 26,732 வாக்காளர்களும் சேர்ந்து மொத்தம் 123,557 வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்