பதிவு ரத்துச் செய்யப்பட்ட கார்கள்: விதிமுறைகளைக் கடுமையாக்க எல்டிஏ திட்டம்

பதிவு ரத்துச் செய்யப்பட்ட கார்கள்: விதிமுறைகளைக் கடுமையாக்க எல்டிஏ திட்டம்

2 mins read
f810a50e-b6d3-4d1b-b142-ed4e5a6e08e4
2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், பதிவு ரத்துச் செய்யப்பட்ட 122 கார்கள் சாலையில் இயங்கிய சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் பதிவு ரத்துச் செய்யப்பட்ட கார்கள் சாலைகளில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) கடுமையான புதிய விதிமுறைகளைப் பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம் பதிவு ரத்துச் செய்யப்பட்ட வாகனங்களின் பொறுப்பு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு மாற்றப்படும்.

‘அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர் திட்டத்தை’ ஆணையம் பரிசீலிக்கிறது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் பதிவு ரத்துச் செய்யப்பட்ட கார்களை அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்துவிட்டால், அந்த வாகனங்களை அழிப்பது அல்லது ஏற்றுமதி செய்வது தொடர்பான பொறுப்புகள் உரிமையாளர்களைச் சேரமாட்டா.

பதிவு ரத்துச் செய்யப்பட்ட வாகனங்களைக் கையாள்வதற்கும் அவை முறையாக அகற்றப்பட்டுவிட்டன என்பதை ஆணையத்திடம் நிரூபிப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட அந்த நபர்களே பொறுப்பாவார்கள்.

வாகனம் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டவுடன் வாகன உரிமைச் சான்றிதழ், முன்னுரிமைக் கூடுதல் பதிவுக் கட்டணம் ஆகியவற்றின் எஞ்சிய தொகையை உடனடியாக வழங்குவது குறித்தும் ஆணையம் பரிசீலித்து வருகிறது. தற்போது இந்தத் தொகை கைக்கு வர 4 முதல் 7 நாள்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக மோட்டார் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு வாகனம் பதிவு ரத்துச் செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் அது முறையாக அழிக்கப்பட்டுவிட்டது அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது என்பதை ஆணையத்திற்கு உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகே, வாகன உரிமைச் சான்றிதழ், முன்னுரிமைக் கூடுதல் பதிவுக் கட்டணத்திற்கான எஞ்சிய தொகை உரிமையாளர்களுக்குக் கிடைக்கும்.

இருப்பினும், ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் பதிவு ரத்துச் செய்யப்பட்ட சில வாகனங்கள் சாலைகளில் சென்றுவருவதை ஆணையம் கண்டறிந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், பதிவு ரத்துச் செய்யப்பட்ட 122 கார்கள் சாலையில் இயங்கிய சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன.

இது 2024ஆம் ஆண்டைப்போன்று (75) கிட்டத்தட்ட இருமடங்கு; 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் (39) மூன்று மடங்கு.

பதிவு ரத்துச் செய்யப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தும் குற்றத்தை முதன்முறையாகப் புரிவோருக்கு $20,000 வரை அபராதமோ ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும். மீண்டும் தவறு செய்வோருக்குத் தண்டனை இரட்டிப்பாகும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நிலப் போக்குவரத்து ஆணையம்கார்பதிவுசட்டவிரோதம்சாலைபயணம்