ஜுவல் சாங்கி விமான நிலையத்தை லெகோ கட்டைகளால் ஆன அலங்கரிப்பு பார்ப்போரை வெகுவாகக் கவர்கிறது.
பூக்கள் மற்றும் தாவரங்களின் பிரம்மாண்டக் கண்காட்சியுடன் வண்ணமயமான பூஞ்சோலையாக அவ்விடம் உருவெடுத்துள்ளது. ‘செலிபிரேட் ஜுவல் புளூம்ஸ்’ என்ற பெயரிலான இந்த நிகழ்வு, வணிக வளாகம் ஒன்றில் நடைபெறும் தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய லெகோ தாவரக் கண்காட்சியாகும்.
செவ்வாய்க்கிழமையன்று (மே 26) தொடங்கிய இந்த நிகழ்வுக்காக, ஏறத்தாழ 800,000 லெகோ கட்டைகளைப் பயன்படுத்திப் பிரம்மாண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஜுவல்லின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியின் பின்னணியில் அமைந்துள்ள ‘ஃபாரஸ்ட் வேலி’ பகுதியில் இரண்டு மீட்டர் உயரமுடைய பிரம்மாண்ட லெகோ ரோஜா மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜுவல்லின் ஐந்தாவது தளத்தில் உள்ள கேனோபி பூங்கா, லெகோ உலகத் தோட்ட வரிசையின் ஈர்ப்புடன் ஒரு தாவரவியல் மரபுப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் லெகோவினால் கட்டப்பட்ட ‘கோய் மீன்கள்’, தாமரைகள் ஆகியவற்றைக் கொண்ட ஜப்பானியத் தோட்டம், மெடிட்டிரேனியன் பாணி மலர்ச் சூழல் மற்றும் பிரம்மாண்ட லெகோ உருவத்தைக் கொண்ட ஆங்கிலேயர் நாட்டுப்புறத் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் ஆடை அலங்கார மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆடை அலங்காரக் காட்சியில், லெகோ தாவரங்களால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து விளம்பர அழகிகள் வலம் வந்தனர். இந்த ஆடைகள் ஜுவல்லின் லெகோ தற்காலிகக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வருகையாளர்கள் ஜுவல்லில் உள்ள ஏழு இடங்களில் நடைபெறும் இருவழித் தொடர்பு லெகோ முத்திரை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்று, முத்திரைகளை முழுமையாகச் சேகரித்துத் தற்காலிகக் கடையில் சிறப்பு நினைவுப் பரிசைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பு இருக்கும் வரை மட்டுமே இப்பரிசுகள் வழங்கப்படும். ‘ஃபாரஸ்ட் வேலி’ கண்காட்சி ஜூலை மாதம் 26ஆம் தேதி வரையிலும், கேனோபி பூங்காவின் அலங்காரங்கள் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரையிலும் நீடிக்கும்.

