வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து அதிகமாகும் என்ற எண்ணம், வீடு வாங்குவோரிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதோடு, தங்கள் வீடு விற்கப்படக்கூடிய விலை குறித்து வீடு விற்போரின் எதிர்பார்ப்புகளையும் அவை அதிகரிக்கின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
இந்த உளவியல் ரீதியான அம்சம், அதிகரிக்கும் வீட்டு விலைக்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டினார்.
மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றத்தை் தணிக்க அரசாங்கம் வீவக கடன் வரம்பை இறுக்கமாக்கி உள்ளது. அது குறித்து அமைச்சர் லீ விளக்கம் அளித்தார்.
புதிய அல்லது மறுவிற்பனை வீடு வாங்க வீவக கடனைப் பயன்படுத்துபவர்களுக்கு வீட்டின் விலையில் அல்லது சொத்தின் மதிப்பில் அதிகபட்சம் வழங்கப்பட்ட 80 விழுக்காட்டுக் கடன், ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து 75 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு லீ பேசினார்.
“நாம் கவனமாக இல்லையெனில், சந்தையைப் பாதிக்கக்கூடிய அத்தகைய காரணங்களால் மறுவிற்பனைச் சந்தை பொருளியல் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடும்,” என்று திரு லீ கூறினார்.
மறுவிற்பனைச் சந்தையில் விலையைத் தணிக்கும் நடவடிக்கைகள் தவிர, சிங்கப்பூரர்களுக்கு நிலைமை குறித்து சரியான புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் உளவியல் அம்சத்தையும் கையாளலாம் என்றார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
ஒரு மில்லியன் வெள்ளிக்கும் மேலான விலையில் வீவக வீடுகள் கைமாறியது, ஒட்டுமொத்த வீவக மறுவிற்பனை வீட்டு விலை குறித்து கவலையை ஏற்படுத்தியிருப்பதை அவர் சுட்டினார்.
மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மறுவிற்பனை வீட்டு விகிதம் அதிகரித்துள்ளபோதும், அது மிகச் சிறியது என்று திரு லீ கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளிலும், அது 2 விழுக்காடு மட்டுமே.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நாலறை வீடுகள் அல்லது அதற்கும் சிறிய வீடுகளில் 0.5 விழுக்காடு மட்டுமே ஒரு மில்லியன் வெள்ளிக்கு அல்லது அதற்கும் மேல் விற்கப்பட்டதாகத் திரு லீ கூறினார்.
“அத்தகைய செய்திகள் வெளிவரும்போது, ஒவ்வொரு மறுவிற்பனை வீடும் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதைவிட அதிகம் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகிறது,” என்றார் அவர்.
சென்ற ஆண்டு, முதல்முறை மறுவிற்பனை வீடுகளை வாங்கிய பத்தில் எட்டுப் பேர், வீவக கடன்களைச் செலுத்த தங்கள் மாதாந்தரக் குடும்ப வருமானத்தில் 25 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தியதாகத் திரு லீ தெரிவித்தார்.

