மேம்படுத்தப்பட்ட பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு பற்றிய விவரங்கள்; 2027ன் தொடக்கத்தில் அறிவிப்பு

மேம்படுத்தப்பட்ட பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு பற்றிய விவரங்கள்; 2027ன் தொடக்கத்தில் அறிவிப்பு

2 mins read
332b2817-3636-4a8b-bdba-3825fac1a32e
பிள்ளைகள் தொடர்பான அனைத்து விடுப்புகளுக்குமான முழுக் காலத்திற்கும் குறிப்பிட்ட உச்சவரம்பு வரை முதலாளிகளுக்கான செலவை அரசாங்கம் ஈடுசெய்யும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு மேம்பாடுகள் குறித்த விவரங்களைத் ‘திருமணம் மற்றும் பெற்றோர் நிலை மீட்டமைப்புப் பணிக்குழு’ 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டத் திருத்தங்கள் தேவைப்படுவதால், இந்த மேம்பாடுகளைச் செயல்படுத்துவதற்குக் கால அவகாசம் எடுக்கும் என்றும் முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான விவரங்களை அரசாங்கம் தீர்மானித்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த மாற்றங்களால் ஏற்படும் செயல்பாட்டுத் தாக்கங்களைச் சமாளிக்க முதலாளிகளுக்கும் நேரம் தேவை என்று பணிக்குழுவின் தலைவரான குமாரி இந்திராணி மேலும் தெரிவித்தார்.

விரிவு செய்யப்பட்ட பிள்ளைப் பராமரிப்பு விடுப்புக் கொள்கை, ஒட்டுமொத்தப் பணியாளர்களையும் பணியிடச் செயல்பாடுகளையும் எவ்வாறு பாதிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

பெற்றோர் ஒவ்வொருவருக்கும் 12 நாள்கள் வரை பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு கிடைக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், தேசிய தினப் பேரணி   உரையின்போது அறிவித்திருந்தார். 

புதிய திட்டத்தின்கீழ், ஒரு குழந்தை இருந்தால் ஒவ்வொரு பெற்றோருக்கும் எட்டு நாள் விடுப்பும், இரண்டு குழந்தைகள் இருந்தால் 10 நாள் விடுப்பும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் 12 நாள் விடுப்பும் கிடைக்கும்.

தற்போது, பெற்றோருக்கு ஆறு வயதிற்குக் குறைவான வயதுடைய குழந்தை இருந்தால் ஆண்டுக்கு ஆறு நாள் விடுப்பும் அல்லது ஏழு முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளை இருந்தால் ஆண்டுக்கு இரண்டு நாள் விடுப்பும் வழங்கப்படுகிறது. இதிலிருந்தே புதிய திட்டத்திற்கான நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிள்ளைகள் தொடர்பான அனைத்து விடுப்புகளுக்குமான முழுக் காலத்திற்கும் குறிப்பிட்ட உச்சவரம்பு வரை முதலாளிகளுக்கான செலவை அரசாங்கம் ஈடுசெய்யும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் முதல் கட்டப் பரிந்துரைகளே இந்த மேம்பாடுகளாகும்.

அதிகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நிதியை, தற்காலிகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது அல்லது கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் ஊழியர்களை அங்கீகரிப்பது போன்ற ஏற்பாடுகளுக்கு முதலாளிகள் பயன்படுத்தலாம் என்று குமாரி இந்திராணி கூறினார். 

குறிப்புச் சொற்கள்