சிறுவயதிலிருந்தே தேசத்திற்காகப் பணியாற்ற வேண்டும் எனும் ஆர்வம் கொண்டிருந்த தேவமித்ரா சந்திரசேகர், 28, தற்போது கிடைத்துள்ள ‘சி4எக்ஸ்’ (கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கணினிகள்) நியமனம் மூலம் அந்த ஆசை நிறைவேறியதில் பெருமிதம் கொண்டுள்ளார்.
மூத்த ராணுவ வல்லுநராக ஜனவரி 21ஆம் தேதியன்று அதிகாரத்துவ நியமனம் பெற்றார் தேவமித்ரா.
இணையப்பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றவுள்ள இவர், அடிப்படையில் மின்பொறியாளர்.
நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற இவர், மூன்றாமாண்டில் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் சிலவற்றைத் தேர்தெடுத்துப் படித்தார்.
“மின்னணுவியல், மென்பொருள் இரண்டு குறித்த புரிதலும் இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி, அதிகரித்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த சிரமங்களிலிருந்து தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட முடிவெடுத்தேன்,” என்றார் மித்ரா.
சொல்வதற்கு எளிதாகத் தோன்றினாலும் இந்தத் துறை மாற்றம் எளிதாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர், “கல்வி முடித்து வெளியில் வந்தபின்பும் அனுபவம் தேவைப்பட்டது. கற்றவற்றைப் பணியில் செயலாக்கும் திறனைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது,” என்றார்.
அதற்காக நான்கு மாதப் பயிற்சியில் தம்மை இணைத்துக்கொண்டதுடன் முழுவீச்சில் பணிக்காகத் தம்மை தயார்ப்படுத்திக் கொண்டதாகவும் மித்ரா சொன்னார்.
தற்போது இப்பணியின் மூலம், “அன்றாடம் இணையப் பாதுகாப்புக்காக உழைப்பதற்கும், தலைமைத்துவப் பதவி என்பதால் அதன்மூலம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி,” என்றார் மித்ரா.
தொடர்புடைய செய்திகள்
தம் பெற்றோரின் முன்னிலையில் இந்த நியமனம் பெற்றதில் பெருமை அடைந்ததாகக் கூறிய அவர், பணியில் இணைந்து புதிய தொழில்நுட்பங்களில் பணியாற்றப் பேராவலுடன் காத்திருப்பதாகவும் சொன்னார்.
மூத்த ராணுவ வல்லுநர் நியமன விழா
சிங்கப்பூர் ஆயுதப் படையின் 30வது மூத்த ராணுவ வல்லுநர் நியமன விழா ஜனவரி 21ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சி நிலையத்தின் ராணுவப் பயிற்சிக்கழகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிங்கப்பூர் ராணுவத்தில் 25 பேர், சிங்கப்பூர்க் கடற்படையிலிருந்து 28 பேர், சிங்கப்பூர் ஆகாயப்படையிலிருந்து 31 பேர், மின்னிலக்க, உளவுத்துறைப் படையிலிருந்து 144 பேர், இணைச் சேவையிலிருந்து (Joint Service) ஆறு பேர் உட்பட 243 பேர் மூத்த ராணுவ வல்லுநர்களாக நியமனம் பெற்றனர்.
இவ்விழாவில், தற்காப்புத் துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் பேசிய திரு டெஸ்மண்ட் சூ, புதிய திறன்களை மேம்படுத்தி, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு மூத்த ராணுவ வல்லுநர்கள் துணைபுரிவதாகச் சொன்னார்.
ராணுவ வல்லுநர்களாக நியமனம் பெற்றுள்ளோர்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், “எதிர்வரும் சவால்கள் எளிமையானதல்ல. ஆனால், வல்லுநர்களின் நிபுணத்துவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின்மீது ஆயுதப்படை நம்பிக்கை கொண்டுள்ளது,” என்றார்.
மேம்படுத்தப்பட்ட நிபுணர் நியமனத் திட்டம் (Enhanced Expertise Deployment Scheme) குறித்து தேசியச் சேவையாற்றுவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தற்காப்பு அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டு வருவதை துணையமைச்சர் சூ சுட்டிக்காட்டினார்.

