போதைப்பொருள் பயன்பாட்டை ஒரு நிமிடத்திற்குள் கண்டறியும் கருவி

போதைப்பொருள் பயன்பாட்டை ஒரு நிமிடத்திற்குள் கண்டறியும் கருவி

2 mins read
324bbc4e-7ead-415c-b106-2d10d3b62d37
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 2026ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டக் கருத்தரங்கின்போது நடைபெற்ற கண்காட்சியில், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிவதற்கான முடிக் கருவி காட்சிப்படுத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கிறாரா என்பதை ஒரு நிமிடத்திற்குள் கண்டறியும் கருவி ஒன்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கருவியைக் கொண்டு ஒருவரின் முடியை இடுக்கி (clip), ஸ்கேன் செய்யவேண்டும்.

அந்தக் கருவியின் முடிவுகள் மடிக்கணினியில் திரையிடப்படும். அதனைப் பயன்படுத்த முடியை வெட்டவேண்டிய அவசியமில்லை.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆய்வுசெய்யும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் அந்தக் கருவியும் ஒன்று. புதன்கிழமை (ஜூலை 22) நடைபெற்ற அப்பிரிவின் வேலைத்திட்டக் கருத்தரங்கு 2026ல் அந்தக் கருவி காட்சிப்படுத்தப்பட்டது.

ஹோம் டீம் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பால் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் அந்தக் கருவி, போதைப்பொருள் சோதனை முறையை எளிமையாக்குவதன் மூலம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.

அமைப்பின் நிபுணத்துவத் தடயவியல் நிலையத்தைச் சேர்ந்த தடயவியல் விஞ்ஞானி ஓங் ஷியாவ் வேய், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய அத்தகைய கருவியைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் ஒரே நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும் என்று கூறினார்.

இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் புலனாய்வுப் பணிகளை மேலும் திறம்படச் செய்யக்கூடிய மற்றொரு உருவாக்கம் ‘நார்கோநெட்’ (NarcoNet) ஆகும்.

அது தரவுகளைப் பதிவுசெய்யும் பணியைப் பெருமளவில் குறைக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு தளமாகும்.

அந்த மென்பொருள், சந்தேக நபர் ஒருவரின் கைப்பேசி, உரையாடல் பதிவுகளை ஆராய்ந்து, எந்த மொழியில் இருந்தாலும் குற்றத்தை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல்கள், புகைப்படங்கள் அல்லது போதைப்பொருள் விற்பனையைக் கண்டறியும் ஆற்றலைக் கொண்டது.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, ஹோம் டீம் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய ‘நார்கோநெட்’ மென்பொருளால், போதைப்பொருள் விசாரணையில் சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் திரட்டி, ஓர் உண்மை நிலை அறிக்கையை உருவாக்கமுடியும்.

குறிப்புச் சொற்கள்