நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட புதிய மருந்துகளில் சில, மற்ற மருத்துவப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம் என அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
கிட்டத்தட்ட 20 விழுக்காடு உடல் எடையைக் குறைக்கவல்ல ‘செமகுளுடைட்’ (Semaglutide), ‘டிர்ஸ்படைடு’ (Tirzepatide) ஆகியவை, புதிதாக வந்துள்ள மருந்துகளிலேயே வீரியம் மிகுந்தவை.
டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் தயாரிக்கும் செமகுளுடைட் மருந்துகள் ‘ஒசெம்பிக்’ (Ozempic) எனும் பெயரில் நீரிழிவு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதே மருந்தை உடல் பருமனைக் குறைக்க ‘வெகோவி’ (Wegovy) என்ற பெயரில் மருந்தளவைச் சற்று அதிகப்படுத்தி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
அதேபோன்று, அமெரிக்க நிறுவனமான ‘எலி லில்லி’, நீரிழிவு நோய்க்கான மருந்தை ‘மவுன்ஜாரோ’ (Mounjaro) என்ற பெயரிலும் உடல் எடை குறைப்புக்கான மருந்தை ‘ஜெபவுண்ட்’ (Zepbound) எனவும் சந்தைப்படுத்துகிறது.
இந்நிலையில், இந்த குளுகோகன் போன்ற ‘பெப்டைட் 1’ (GLP-1) மருந்துகளை மறதி நோய், பழக்கங்களுக்கு அடிமையாதல், மனநலப் பிரச்சினைகள் போன்ற நோய்களுக்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியின் ஆரம்பகட்டத்தில் தெரியவந்துள்ளது.
உடல் பருமன் அல்லது அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்ட இதயம் சம்பந்தப்பட்ட நோய், ரத்தக்குழாய் அடைப்பு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக ‘வெகோவி’ மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து அமைப்பு (எஃப்டிஏ) மார்ச் மாதம் அங்கீகாரம் அளித்தது.
ஆய்வின்போது இந்த மருந்தை உட்கொண்ட நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்புடையவர்களின் உடல்நிலையில் 24 விழுக்காடு முன்னேற்றம் தெரிந்ததாக நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் தெரிவித்தது.
நோயின் தீவிரத்தைக் குறைத்து சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது வாழ்நாள் முழுவதும் சுத்திகரிப்பு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இம்மருந்துகள் ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறு பேருக்கு நீரிழிவு நோயால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தேசிய சிறுநீரக அறநிறுவனம் (என்கேஎஃப்) ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $300 மில்லியன் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.