பிரித்தம் ஆணித்தரம்: பொய்யை மூடி மறைக்கச் சொல்லவில்லை

3 mins read
7d108faf-a16f-44ec-9f15-4747d116c0ad
தற்காப்பு வழக்கறிஞர்களுடன் காணப்படும் பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங், வழக்கு விசாரணையின் 10வது நாளில் நீதிமன்றத்தில் முன்னிலையானார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், பொய்யை மூடி மறைக்கும்படி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானிடம் கூறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திரு சிங், செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 5) நடந்த நீதிமன்ற விசாரணையின்போது அவ்வாறு கூறினார்.

ஆகஸ்ட் 8ல் பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம், ஃபைசல் மனாப் ஆகியோருடன் திருவாட்டி கானைச் சந்தித்தபோது திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் கூறிய பொய் குறித்து என்ன செய்யவேண்டும் என்ற உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று கூறினார்.

தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோயின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சிங், என்ன செய்யவேண்டும் என்பதற்கான முடிவை அப்போது தாம் எடுக்கவில்லை என்றாலும் இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்படவேண்டும் என்பதை அறிந்ததாகக் கூறினார்.

“ஆனால் திருவாட்டி கான் அப்போது இருந்த மனநிலையால் அவரை முதலில் நிதானப்படுத்திக்கொண்டு அவர் தயாரான பிறகு, இந்த விவகாரத்தைக் கையாளலாம் என நினைத்திருந்தேன்,” என்று திரு சிங் கூறினார்.

தாம் திருவாட்டி கானைத் தொடர்ந்து பொய்யுரைக்கச் சொல்லவில்லை என்றும் இந்த விவகாரத்தை அரசாங்கம் நிச்சயம் விசாரிக்கும் என்பதைத் தாம் நன்கு அறிந்திருந்ததாகவும் திரு சிங் கூறினார்.

“மக்கள் செயல் கட்சி எப்படிச் செயல்படுகிறது என்பது எனக்குத் தெரியும்,” என்று கூறினார் திரு சிங்.

கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று திருவாட்டி கானுடன் தாம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது, திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவரை அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவர் தம்மிடம் கூறியதாக திரு சிங் தெரிவித்தார்.

கூடுதல் விவரங்களைத் தாம் அந்த அழைப்பில் தொடர்ந்து கோரியபோது, ‘ரகசியத்தன்மை என்பது ஒன்று இருக்கிறதா?’ என்று திருவாட்டி கான் தம்மிடம் பதிலளித்ததாகத் திரு சிங் கூறினார்.

“நான் சொன்னேன், ‘இதோ பாருங்கள், நான் இந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர். இது நடந்ததா, இல்லையா என நான் உடனே தெரிந்துகொள்ளவேண்டும்’,” என்று திரு சிங் கூறினார்.

“அப்போது அவர், ‘இல்லை அவ்வாறு நடக்கவில்லை’ எனப் பட்டென்று கூறினார்,” என்றார் திரு சிங்.

பாதிக்கப்பட்டவருடன் திருவாட்டி கான் காவல் நிலையத்திற்குச் சென்றதாக அவர் கூறியது பற்றி திரு சிங், தம் பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

திருவாட்டி கானிடம் என்ன பதில் கூறினார் என்று திரு ஜுமபோய் திரு சிங்கிடம் கேட்டபோது திரு சிங், தாம் மிகவும் கவலைப்பட்டதாகக் கூறினார்.

பிறகு இதுபற்றி பேசலாம் எனச் சொல்லி தொலைபேசி அழைப்பை முடித்துக்கொண்டதாகத் திரு சிங் கூறினார்.

மறுநாளான ஆகஸ்ட் 8ல் பாட்டாளிக் கட்சித் தலைவர்களான சில்வியா லிம், ஃபைசல் மனாப் ஆகியோரையும் திருவாட்டி கானையும் ஒருசேர திரு சிங் சந்தித்தார். அதுவரை தாம் திருவாட்டி கானிடம் பேசவில்லை என்றார் திரு சிங்.

அந்தச் சந்திப்பின்போது திருவாட்டி கான், தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினார். அப்போது அவர், நிலைகுலைந்து அழுதபோது தாமும் சந்திப்பில் இருந்த மற்றவர்களும் திகைத்திருந்ததாகக் கூறினார் திரு சிங்.

தமக்கு நடந்த சம்பவத்தைப் பற்றி தம் கணவர், மனநல ஆலோசகர் மற்றும் நண்பர்களும் கட்சி உறுப்பினர்களுமான லோ பெய் யிங், யுதிஷ்த்ரா நாதன் ஆகியோருக்கு மட்டும் தெரிந்துள்ளதாக திருவாட்டி கான் அப்போது கூறினார்.

பாலியல் சம்பவம் குறித்து கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை என்றார் திரு சிங். அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து திருவாட்டி கான் உரையாற்றியதன் தொடர்பில் பேசப்பட்டது. “இதனைப் பற்றி கலந்துரையாடுவது சந்திப்பின் ஆரம்ப நோக்கமாக இருந்தது,” என்றும் திரு சிங் கூறினார்.

இரண்டாவது முறை திருவாட்டி கான் பொய்யுரைத்த பிறகு, தாம் செய்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி திருவாட்டி கானிடம் கேட்டதாக திரு சிங் கூறினார்.

“நீங்கள் எடுத்த முடிவைப் பாருங்கள்,” என்று தாம் பிரமையில் இருந்ததுபோல காணப்பட்ட திருவாட்டி கானிடம் கோபத்துடன் கூறியதாகத் திரு சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்