மசேநிதிக்குச் செலுத்தவேண்டிய பங்கைத் தெரிவிக்கவில்லை: மேரி சியா

மசேநிதிக்குச் செலுத்தவேண்டிய பங்கைத் தெரிவிக்கவில்லை: மேரி சியா

தங்களின் நான்கு நிறுவனங்களுக்கான மசேநிதிப் பங்கைச் சரியாகச் செலுத்தவில்லை என்று மேரி சியா ஒப்புக்கொண்டது
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Oct 2026 - 6:05 pm

2 mins read

நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் அழகுப் பராமரிப்பு, நலன் குழுமமான மேரி சியா ஹோல்டிங்ஸ், தங்களுக்குச் சொந்தமான ஐந்தில் நான்கு நிறுவனங்களுக்கான, மத்திய சேமநிதிப் பங்கை சரிவரச் செலுத்தாததைத் தாங்கள் தெரிவிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக அனுப்பப்பட்ட நீதிமன்றக் கடிதங்கள் குறித்து தங்களின் தலைமை நிர்வாகிக்குத் தெரிந்தபோதும் தகவல்களைச் சரிவரத் தெரிவிக்கவில்லை என்று மேரி சியா கூறியது.

அக்டோபர் 9ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது

சிங்கப்பூர் பங்குச் சந்தையின் விதிமுறைப் பிரிவு கேட்ட கேள்விகளுக்கு மேரி சியா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) பதிலளித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நிறுவனத்தின் அறிவிப்பில் சம்பந்தப்பட்ட நான்கு நிறுவனங்களைப் பற்றியோ அவை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் பற்றியோ தெரிவிக்காதது ஏன் என்று கேட்கப்பட்டது. பிரச்சினை குறித்து முதன்முதலில் தகவல் தெரிந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை என்றும் கேட்கப்பட்டது.

ஒரு நிறுவனத்துக்கு மத்திய சேமநிதிக்குச் செலுத்தவேண்டிய 50,208 வெள்ளிப் பங்கைத் தாங்கள் செலுத்தவில்லை என்று செப்டம்பர் 11ஆம் தேதி மேரி சியா தெரிவித்தது. எனினும், அது இதர நான்கு நிறுவனங்களுக்கான மத்திய சேமநிதித் தொகையைப் பற்றியோ நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

மேரி சியாவின் ஐந்து நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் செப்டம்பர் 10ஆம் தேதி ஒன்றாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அவற்றுக்கு அனுப்பப்பட்ட நீதிமன்றக் கடிதங்கள் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரிக்குத் தெரிந்திருந்தது.

தகவல் சேகரிப்பில் குறைபாடுகள்

தங்களுக்கிடையே தகவல் சேகரிப்பு, தகவல்களை வெளியிடும் முறைகளைச் சோதிப்பது ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தது அதற்குக் காரணம் என்று மேரி சியா தெரிவித்தது.

மேலும், தனது ஐந்து நிறுவனங்களுக்கும் மத்திய சேமநிதிக்குச் செலுத்தவேண்டிய பங்கு 103,727 வெள்ளி என்று மாறியுள்ளதாக மேரி சியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இத்தொகை, அதற்கு முதல் நாள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கிட்டத்தட்ட 153,000 வெள்ளியைவிடக் குறைவாகும்.

இவ்விவகாரத்தின் தொடர்பில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்குப் பிறகு மத்திய சேமநிதி தொகை குறித்த விவரங்களை வெளியிட்டது. மேரி சியாவின் நிறுவனங்கள் செலுத்திய தொகை கணக்கில்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நிதிநெருக்கடிமசேநிநிறுவனம்தலைமை நிர்வாக அதிகாரிநீதிமன்றம்வழக்கு