வெளிநாட்டு விவகாரங்கள்மீது மிகுந்த அக்கறைகொள்ளும் சிங்கப்பூரர்கள், தங்களுக்குச் சரியெனப் படும் கருத்துகளுக்குக் குரல் கொடுப்பதும் இயல்பே.
ஆனால், கருத்து வேறுபாடுகள் எத்தகையதாக இருந்தாலும், வெளிநாட்டு விவகாரங்கள் நம்மிடையே பிளவை ஏற்படுத்த இடம் தரக்கூடாது. வெளிநாட்டு மோதல்களால் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் எதிர்க்கும் வகையில் மாறக்கூடாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் அன்-நஹ்தா பள்ளிவாசலும் அதில் உள்ள நல்லிணக்க நிலையமும் புதன்கிழமை (அக்டோபர் 14) நடத்திய அதன் 20ஆம் ஆண்டு நிறைவு இரவு விருந்தில் உரையாற்றியபோது திரு வோங் இவ்வாறு கூறினார்.
அண்மை மாதங்களில் இணையத்தில் உணர்வுகளைத் தூண்டும் கருத்துகள் பரவி வருகின்றன. ஒரு தவறான கருத்து மற்றொன்றை ஊக்குவித்து, ஏற்றுக்கொள்ளத்தகாத நடத்தையைச் சாதாரணமான ஒன்றாக படிப்படியாக மாற்றக்கூடும்.
அத்தகைய நடத்தைக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
செப்டம்பரில் நடப்புக்கு வந்த இன நல்லிணக்கப் பாதுகாப்புச் சட்டம், இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டுத் தாக்கங்களுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குவதாக அவர் கூறினார்.
‘நல்லிணக்கம் முதல் அக்கம்பக்க நல்லுறவு வரை: எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது’ எனும் கருப்பொருளில் நிகழ்ச்சி நடைபெற்றது.
‘ஜீரான்’ (JIRAN), அதாவது மலாய் மொழியில் ‘அக்கம்பக்கத்தினர்.’ இதன் சமயங்களுக்கிடையிலான ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வழிமுறையைப் பிரதமர் வோங் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
வேறுபாடுகளைக் கடந்து அமைப்புகளும் சமூகங்களும் நடைமுறை சார்ந்த வழிகளில் எவ்வாறு ஈடுபடலாம் என்பதைக் காட்டும் நோக்கில், அக்கம்பக்க நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் ‘ஜீரான்’ வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது, சமய, பள்ளிவாசல், சமூகத் தலைவர்கள், சமயங்களுக்கிடையிலான அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள், நல்லிணக்க நிலையம், அன்-நஹ்தா பள்ளிவாசல் ஆதரவாளர்கள் எனக் கிட்டத்தட்ட 450 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஒற்றுமையை வலுப்படுத்த உதவிவரும் பள்ளிவாசல் தொண்டூழியர்களுக்குத் தமது உரையில் நன்றி தெரிவித்த பிரதமர், 2006ல் நல்லிணக்க நிலையம் திறக்கப்பட்ட நேரத்தில் செப்டம்பர் 11 தாக்குதலின் விளைவுகளை உலக நாடுகள் தொடர்ந்து உணர்ந்ததைச் சுட்டினார்.
“உலகம் முழுவதும், தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரில் வன்முறைகளை அரங்கேற்றினர். இஸ்லாமிய சமயம் பற்றிய தவறான புரிதல் பரவலாக நிலவியது. சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையின்மை அதிகரித்து வந்தது,” என்று திரு வோங் அன்றைய நிலவரத்தை நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூர் இரண்டு வழிகளில் இதற்குப் பதிலளிக்க வேண்டியிருந்ததைக் குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மட்டுமன்றி, பிளவு மனப்பான்மையையும் சந்தேகத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததாகச் சொன்னார்.
“இந்த முயற்சிகளில் நல்லிணக்க நிலையம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது,” என்றார் பிரதமர் வோங்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் நல்லிணக்க நிலையத்தின் நோக்கம் தொடர்ந்து முக்கியத்துவத்துடன் திகழ்வதாகத் திரு வோங் கூறினார்.
இஸ்லாத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தின் மிரட்டல் மறையவில்லை. ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து ஆதரவாளர்களைத் திரட்டி, பிரசாரத்தைப் பரப்பி உலகெங்கிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகின்றன,” என்று அவர் மேலும் சொன்னார்.
சிங்கப்பூரைப் பயங்கரவாதிகள் தொடர்ந்து குறிவைப்பதாகக் கூறிய பிரதமர், சுயமாக பயங்கரவாதக் கொள்கைகளை ஏற்கும் போக்கு தொடர்ந்து சிக்கலாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
“இதனால்தான் நாம் ஒருவரையொருவர், குறிப்பாக, இளையர்களைத் தொடர்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மை உலகுடன் அவர்கள் இணைந்திருக்கும்படிச் செய்யவேண்டும்,” என்றார் பிரதமர்.
