தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மிரட்டல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இரு தளபத்தியங்கள்

3 mins read
cb56460c-092c-4669-a0cb-6c5e0d10f63d
தற்காப்பு அமைச்சின் ஹில்வியூ முகாமில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (நடுவில்), இரு தளபத்தியங்களை சிறப்பு விருந்தினராக முன்னின்று தொடங்கிவைத்தார். - படம்: சாவ் பாவ்

இணைய மிரட்டல்கள் அதிகரித்துவரும் வேளையில் தற்காப்பு அமைச்சின் மின்னிலக்க, உளவுத்துறைப் படை, தற்போது இயங்கிவரும் அதன் பணிக்குழுவை இரு பிரிவுகளாக மறுகட்டமைப்பு செய்துள்ளது.

தற்காப்பு இணையவெளி தளபத்தியம், சிங்கப்பூர் ஆயுதப்படை C4, மின்னிலக்கமயமாதல் தளபத்தியம் எனும் அவ்விரு பிரிவுகளும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்படவுள்ளன.

தற்காப்பு அமைச்சின் ஹில்வியூ முகாமில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அந்த இரு தளபத்தியங்களைச் சிறப்பு விருந்தினராக முன்னின்று தொடங்கிவைத்தார்.

இரு வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தற்காப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, இரு தளபத்தியங்களைப் பற்றி அமைச்சர் இங் அறிவித்திருந்தார்.

“நமது மின்னிலக்கக் கட்டமைப்பையும் அதிமுக்கிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பையும் பாதுகாக்க சிங்கப்பூர் ஆயுதப்படை இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது. தற்போது இணைய மிரட்டல்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் அதிகமாகி வருகின்றன. சிங்கப்பூர் ஆயுதப்படையும் அத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்,” என்று அமைச்சர் இங் தெரிவித்தார்.

“மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூர் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட ஒரு நாடு. நவீன பொருளியல் கொண்ட சிங்கப்பூரில் நாம் தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருக்கிறோம். அதற்கு ஏதோ ஒன்று நடந்தாலும்கூட நமது ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும்.

“நம் படைவீரர்கள் மின்னிலக்கப் பாதுகாப்புக்கு முக்கியப் பங்காற்றுகின்றனர். தற்காப்பு அமைச்சின் மின்னிலக்க, உளவுத்துறைப் படையும் இதர தனியார் நிறுவனங்களுடன் கைகோத்து தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தீர்வுகளைக் கொண்டுவர வேண்டும்.

“அப்போதுதான் சிங்கப்பூர் ஆயுதப்படை, சவால்களைச் சமாளிக்க ஒரு சிறந்த நிலையில் இருக்க முடியும்,” என்றும் அமைச்சர் இங் குறிப்பிட்டார்.

தற்காப்பு இணையவெளி தளபத்தியம்

இணையவெளி மிரட்டல்களிலிருந்து சிங்கப்பூர் ஆயுதப்படையைத் தற்காக்கும் விதமாக இந்தத் தளபத்தியம் செயல்படும். அரசாங்கம் உள்ளிட்ட இதர பங்காளிகளுடன் இணைந்து சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைத்து இணையவெளி பாதுகாப்புக் குழுமம் ஒன்றை அமைக்கும் பணிகளில் இந்தத் தளபத்தியம் ஈடுபடும்.

பொருத்தமான திறன்களைக் கொண்டுள்ள படைவீரர்கள், இந்தத் தளபத்தியத்துக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். ‘ஈட்ஸ்’ திட்டம்மூலம் அத்தகைய திறன்கள் கொண்ட படைவீரர்கள் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவர்.

சிங்கப்பூர் ஆயுதப்படை C4, மின்னிலக்கமயமாதல் தளபத்தியம்

வன்பொருள், மென்பொருள் திறன்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் ஆயுதப்படை C4, மின்னிலக்கமயமாதல் தளபத்தியம், மின்னிலக்க மாற்றங்களைத் துரிதப்படுத்தும்.

மின்னிலக்கச் செயல்பாட்டு தொழில்நுட்ப நிலையம் இந்தத் தளபத்தியத்தின்கீழ் செயல்படும். ஏற்கெனவே நடப்பில் இருக்கும் தளபத்தியம், கட்டுப்பாடு, தொடர்பு, கணினிகள் செயல்பாட்டுக் குழுமத்தோடு சிங்கப்பூர் ஆயுதப்படை செயற்கை நுண்ணறிவு நிலையம் ஒன்று அமைக்கப்படும்.

மேகக் கணினிப் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு, 5ஜி போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்படும்.

“இப்புதிய மாற்றத்தால் எங்களால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை வைத்து சிங்கப்பூர் ஆயுதப்படையின் இணையவெளிப் பாதுகாப்பை மெருகூட்ட முடியும். சிங்கப்பூர் ஆயுதப்படையின் அம்சங்களை ஒரே தளபத்தியத்துக்குள் கொண்டு வருவதால் செயல்பாட்டை நன்கு மேம்படுத்த முடிகிறது.

“மின்னியல், மின்னணுவியல் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள எனக்கு மின்னிலக்க, உளவுத்துறைப் படை ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்து என் திறன்களை அதிகரிக்க உதவியது. இதில் சேர விரும்பும் இளம் பட்டதாரிகளும் தயக்கமின்றி வரலாம்,” என்றார் தற்காப்பு இணையவெளித் தளபத்தியத்தில் செயல்பாட்டுக்கும் பயிற்சிக்கும் பொறுப்பு வகிக்கும் 5ஆம் நிலை வல்லுநர் எஸ்.சுபாஷ், 37.

தற்காப்பு இணையவெளித் தளபத்தியத்தில் செயல்பாட்டுக்கும் பயிற்சிக்கும் பொறுப்பு வகிக்கும் 5ஆம் நிலை வல்லுநர் எஸ்.சுபாஷ்.
தற்காப்பு இணையவெளித் தளபத்தியத்தில் செயல்பாட்டுக்கும் பயிற்சிக்கும் பொறுப்பு வகிக்கும் 5ஆம் நிலை வல்லுநர் எஸ்.சுபாஷ். - படம்: சாவ் பாவ்
குறிப்புச் சொற்கள்