உலகக் கிண்ண நுழைவுச்சீட்டுகளுடன் தொடர்புடைய மின்னிலக்க நாணய மோசடி

உலகக் கிண்ண நுழைவுச்சீட்டுகளுடன் தொடர்புடைய மின்னிலக்க நாணய மோசடி

2 mins read
a4b067ee-bb96-4b03-b2d4-c9383d846a74
பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய பிறகு, நுழைவுச்சீட்டுகளோ அல்லது பொருள்களோ அவர்களுக்கு அனுப்பப்படுவதில்லை. அதன் பின்னர் அந்தப் போலி இணையப்பக்கங்கள் உடனடியாக முடக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களின் பணத்தை மீட்பது கடினமாகிவிடுகிறது. - படம்: சாவ்பாவ்

உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் அல்லது அதிகாரபூர்வ வர்ததகப் பொருள்களை வாங்கும் போது, மின்னிலக்க நாணயம் முறையில் பணம் செலுத்துமாறு கோரும் இணையப்பக்கங்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை புதன்கிழமையன்று (ஜூலை 1) எச்சரித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டி என்ற பெயரில் போலி இணையப்பக்கங்களை உருவாக்கும் மோசடிப் பேர்வழிகள், சிறப்பு நுழைவுச்சீட்டுகளை வழங்குவதாகக் கூறி, பிட்காயின் அல்லது யுஎஸ்டிடி போன்ற மின்னிலக்க நாணயங்கள் மூலம் பணம் செலுத்துமாறு வாடிக்கையாளர்களை வழிநடத்துகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய பிறகு, நுழைவுச்சீட்டுகளோ அல்லது பொருள்களோ அவர்களுக்கு அனுப்பப்படுவதில்லை. அதன் பின்னர் அந்தப் போலி இணையப்பக்கங்கள் உடனடியாக முடக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களின் பணத்தை மீட்பது கடினமாகிவிடுகிறது.

இது தவிர, உலகக் கிண்ணப் போட்டியின் அதிகாரபூர்வ மின்னிலக்கச் சொத்துகள் என்ற பெயரில் போலி ‘ஃபேன்காயின்ஸ்' அல்லது டோக்கன்களை அறிமுகப்படுத்தி, அவற்றில் முதலீடு செய்யுமாறு தூண்டும் புதிய வகை மோசடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய டோக்கன்களின் மதிப்பைச் செயற்கையாக உயர்த்திய பிறகு, மோசடி செய்பவர்கள் தங்களது பங்குகளை ஒட்டுமொத்தமாக விற்றுவிடுவதால், அதன் விலை திடீரென வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைகின்றனர்.

உலகக் கிண்ணப் போட்டி ஆட்டங்களை இலவசமாக நேரலையில் பார்க்க விரும்புபவர்கள், மின்னிலக்கக் கணக்குகளை இணைக்குமாறு கோரும் தூண்டுகளவு இணையப்பக்கங்களுக்குத் திசைதிருப்பப்படுகின்றனர்.

இதன் மூலம் அவர்களது கணக்கு விவரங்கள் அல்லது மின்னிலக்கச் சொத்துகள் திருடப்படவோ, சாதனங்களில் தீங்குநிரல் புகுத்தப்படவோ வாய்ப்புள்ளது.

காற்பந்து ஆட்டக்காரர்கள் அல்லது பிரபலங்களின் முகங்கள் மற்றும் குரல்களைப் போலியாகப் பயன்படுத்தி வன்போலி விளம்பரங்களை உருவாக்குவதன் மூலம், இந்த ஏமாற்றுத் தளங்களை மக்கள் உண்மை என நம்புகின்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பொதுமக்கள் தங்களது மின்னிலக்க நாணயங்களை இணையத் தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாகாத ‘ஹார்ட்வேர் வாலெட்டுகளில்’ சேமித்து வைக்குமாறும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் உரிமம் வழங்கப்பட்ட அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர்களை மட்டுமே பயன்படுத்துமாறும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

மின்னிலக்க நாணயம் தொடர்பான குற்றங்களால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிப்பவர்கள், உடனடியாக தங்களின் கணக்குகளை முடக்குவதற்கு மின்னிலக்கப் பரிவர்த்தனை நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் அவசரக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கும் csa.gov.sg/singcert/reporting எனும் இணையப்பக்கம் மூலம் புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்