சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல், கடந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) $113 பில்லியன் அளவுக்குப் பங்களித்து உள்ளது. இது ஜிடிபியில் 17.7 விழுக்காடு.
அத்துடன், 208,300 தொழில்நுட்ப வேலைகளையும் மின்னிலக்கப் பொருளியல் உருவாக்கித் தந்துள்ளதாக தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளது.
2022ஆம் ஆண்டைக்காட்டிலும் இது மேம்பட்ட நிலவரம்.
2018ஆம் ஆண்டிலிருந்து, 201,100 வேலைகளையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $106 பில்லியனையும் மின்னிலக்கப் பொருளியல் உருவாக்கியது.
அளவின் அடிப்படையில் நிதிச் சேவை, காப்பீடு போன்ற துறைகளை மின்னிலக்கப் பொருளியல் துறை மிஞ்சிவிட்டது.
அதேநேரம், உற்பத்தித் துறையுடன் ஒப்பிடும் அளவுக்கு அதன் வளர்ச்சி விகிதம் உள்ளது என்று ஆணையம் தனது வருடாந்தர ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) வெளியிடப்பட்டது.
மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சியை இரு அம்சங்களின் அடிப்படையில் அந்த மறுஆய்வு அறிக்கைக் கணக்கிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மதிப்பு கூட்டப்பட்ட அல்லது தகவல், தொடர்பு துறைக்கான பொருளியல் பங்களிப்பு என்பது முதல் அம்சம்.
குறிப்பாக, தொலைத்தொடர்பு, கணினி, மென்பொருள் போன்ற தொழில்நுட்பத் துறைகளுடன் தொடர்புடைய மின்னிலக்கச் சேவைகளுக்கான பங்களிப்பு அது.
இரண்டாவது அம்சம், மின்னிலக்கமற்ற தொழிற்கூடங்கள் மதிப்பு கூட்டப்படுவது.
2023ஆம் ஆண்டு தகவல், தொடர்பு துறை மட்டும் சிங்கப்பூரின் பொருளியலுக்கு 5.7 விழுக்காடு பங்களித்தது. அல்லது $36.3 பில்லியனை அது உருவாக்கியது.
2022ஆம் ஆண்டின் 5.1 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம்.
நிறுவனங்களின் மின்னிலக்கமயத்துக்கான தேவை தொடர்ந்து நீடித்ததே அந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலில் மூன்றில் ஒரு பங்கை வகிக்கும் தகவல், தொடர்புத் துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மின்னிலக்கமற்ற தொழிற்கூடங்களின் மின்னிலக்க மூலதனத்தில் செய்யப்படும் முதலீடுகளில் இருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டல் அம்சம் மின்னிலக்கப் பொருளியலின் எஞ்சிய பகுதிகள் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

