ஆளில்லா வானூர்திகளுக்கு ‘மின்னிலக்கப் பதிவெண் பலகை’

ஆளில்லா வானூர்திகளுக்கு ‘மின்னிலக்கப் பதிவெண் பலகை’

2 mins read
250 கிராமுக்குமேல் எடையுள்ள ஆளில்லா வானூர்திகளுக்கு 2025 டிசம்பர் முதல் கட்டாயம்
47ab2cfe-55e1-4855-bc29-40de8d2b2580
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து 250 கிராமுக்குமேல் எடையுள்ள ஆளில்லா வானூர்திகளுக்கு ‘பி-ரிட்’ எனப்படும் அடையாளப் பலகையைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம்.

பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை அமைகிறது.

‘பி-ரிட்’ ஒரு மின்னிலக்கப் பதிவெண் பலகைப்போல் செயல்படும். அதன் மூலம், ‘வைஃபை’, ‘புளூடூத்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆளில்லா வானூர்தி இருக்குமிடம், அதன் வரிசை எண், அதை இயக்குபவரின் இருப்பிடம் போன்ற தகவல்களைப் பெற முடியும்.

“பாதுகாப்பு நடவடிக்கையாக, வான்வெளியில் உள்ள ஆளில்லா வானூர்திகளை அடையாளம் காண இது உதவும்,” என்று சிங்கப்பூர் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் 2ஆம் தேதி கூறியது.

‘ரேடியோ வேவ்’ எனப்படும் மின்காந்த அலை மூலம் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் சாதனங்கள், தொலை இயக்க முறையில் செலுத்தப்படும் பட்டங்கள் ஆகியவற்றுக்கும் புதிய நடைமுறை பொருந்தும்.

உட்புறங்களில் செயல்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகளுக்கு ‘பி-ரிட்’ பொருத்தத் தேவையில்லை.

செயலாக்க அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கும் அனுமதிக்கப்பட்ட ஆளில்லா வானூர்திச் செயலாக்கத்தின்போது ‘ஃபிளைஇட்சேஃப்’ செயலியைப் பயன்படுத்துவோருக்கும் அந்த அடையாளப் பலகை தேவையில்லை.

மின்னிலக்கப் பதிவெண் பலகை தொடர்பான விதிமுறைகள் ஏற்கெனவே அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நடப்பில் இருப்பதை ஆணையம் சுட்டியது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த அமலாக்கத் திட்டம் தொடர்பில் கருத்துகளை ஆணையம் கோருகிறது. ஆளில்லா வானூர்தி உரிமையாளர்களுக்கு இந்தச் சாதனத்தைப் பொருத்த ஓராண்டு அவகாசம் வழங்குவது பரிந்துரைகளில் ஒன்று.

‘பி-ரிட்’ அடையாளப் பலகைக்கான விலை, அதை பொருத்துவதற்கான கட்டணம் என முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ள ஆணையம் திட்டமிடுகிறது.

புதிதாக விற்கப்படும் பெரும்பாலான ஆளில்லா வானூர்திகளிலும் இந்த ஆண்டு ஆணையத்திடம் பதிந்துகொண்டவற்றில் பாதிக்குமேலான ஆளில்லா வானூர்திகளிலும் இது ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளது.

இலவசமாகப் பொருத்திக்கொள்ள விரும்புவோர் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அமலாக்கம் தொடர்பான பரிந்துரைகள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ‘ரீச்’ இணையத்தளம் வாயிலாக செப்டம்பர் 2ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்