சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் சேவை இடையூறுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் மின்னிலக்கத் திரைகள்

2 mins read
06fe6357-d9b9-4d8c-8d8a-03738ee62b8c
சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் மின்திரைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிராங்கூன் எம்ஆர்டி நிலையப் பயணிகள், ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டாலும் கவலையில்லாமல் பயணத்தைத் தொடர முடியும். அதற்கான புதிய வசதிகள் அந்நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன. அங்கு பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள மின்னிலக்கத் திரைகள், சேவை இடையூறுகள் பற்றிய தகவல்களைக் காட்டுவதோடு பயணிகளுக்குத் தெளிவான மாற்று வழிகளையும் காட்டி உதவும். இந்த முன்னோடி முயற்சி, பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையம், ரயில் சேவைகளை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகியவை சனிக்கிழமை (ஜனவரி 24) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. சில திரைகளில் வெவ்வேறு ரயில் பாதைகளில் உள்ள ரயில்களின் நிகழ்நேர செயல்பாடுகள் காட்டப்படும். தேவை ஏற்படும் சமயங்களில் மற்ற திரைகளில் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கான குறிப்புகள் இடம்பெறும். அந்த நிலையத்தில் உள்ள வடக்கு-கிழக்குப் பாதை, வட்டப் பாதை ஆகிய இரண்டு பகுதிகளிலும் மின்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரயில் நம்பகத்தன்மை பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி தெளிவான, பயணிகளின் பயணத்தை எளிமையாக்கும் தகவல்கள் காட்டப்படும் என்று கூட்டு அறிக்கை குறிப்பிட்டது. கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஆர்டி, எல்ஆர்டி தாமதங்களைக் காட்டும் நிலப்போக்குவரத்து ஆணையத்தின் நிகழ்நேர இணையப்பக்கத்திற்கு துணையாக புதிய மின்திரைகள் செயல்படும் என்றும் அது மேலும் கூறியது. இந்தப் புதிய முன்னோடித் திட்டத்திற்கு ஏன் சிராங்கூன் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, சிங்கப்பூரில் அதிகமானோர் பயணம் செய்யும் நிலையங்களில் அதுவும் ஒன்று என்பதை ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். வடக்கு கிழக்குப் பாதை மற்றும் வட்டப் பாதை ரயில்கள் அதன் வழியாகச் செல்வதால் மாபெரும் ரயில் சந்திப்பு நிலையமாக அது இருக்கிறது என்று அந்தப் பேச்சாளர் சொன்னார். ஏதாவது ஒரு தடத்தில் சேவையில் இடையூறு ஏற்பட்டாலும் அந்நிலையத்தில் பாதிக்கப்படும் ஏராளமான பயணிகளுக்கு மாற்று வழிகள், போக்குவரத்து வாய்ப்புகள் குறித்து தெளிவான மற்றும் சரியான நேரத்தில் வழிகாட்டுதல் தேவைப்படுவதாகக் கூறிய அந்தப் பேச்சாளர், சோதனை முயற்சிகளுக்குப் பிறகு அதிக போக்குவரத்து கொண்ட மற்ற எம்ஆர்டி நிலையங்களிலும் புதிய மின்திரை வசதி கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்றார். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதை அவர் விவரிக்கவில்லை. நிலப் போக்குவரத்து ஆணையம், கூகல் வரைபடம் போன்ற 3வது தரப்புத் தளங்களிலும் நிகழ்நேர பயணம் சார்ந்த தகவல்களை வழங்குவதைக் குறித்து ஆராய்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்