பிஓஎஸ்பி (POSB) வங்கியின் ‘ஸ்மார்ட் படி’ (Smart Buddy) திட்டத்தின்கீழ் பயன்படுத்தப்பட்ட கலோரிகளைக் கணக்கிடும் புதிய அம்சம் கொண்ட கிட்டத்தட்ட 11,000 மின்னிலக்கக் கைக்கடிகாரங்கள் மாணவர்களுக்கு இவ்வாண்டு விநியோகம் செய்யப்படவிருக்கின்றன.
அந்த மின்னிலக்கக் கைக்கடிகாரங்கள் மூலம் பள்ளிக்கூடச் சிற்றுண்டிக் கடைகளிலும் புத்தகக் கடைகளிலும் மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்த முடியும்.
சிங்கப்பூரில் உள்ள 335 பள்ளிகளிலும் தொடர்பில்லா கட்டண முறையைக் கொண்டிருக்க கல்வியமைச்சுடன் செய்துகொள்ளப்பட்ட மூவாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து மின்னிலக்கக் கைக்கடிகாரங்கள் அறிமுகம் காண்கின்றன.
தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியாக் கல்விக் கழகம் ஆகியவை உள்பட சிங்கப்பூரில் 351 பள்ளிகள் உள்ளன.
இவ்வாண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 320,000 மாணவர்கள் திட்டத்துக்குப் பதிவு செய்வர் என்று எதிர்பார்ப்பதாக பிஓஎஸ்பி சொன்னது. வங்கி கடந்த ஆண்டு அணுகிய 253 பள்ளிகளிலிருந்து 230,000 மாணவர்கள் திட்டத்தில் இணைந்தனர்.
2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ‘ஸ்மார்ட் படி’ திட்டம், உணவு அல்லது பொருள்களுக்கான கட்டணங்களை மின்னிலக்கக் கைகடிகாரங்கள் மூலம் செலுத்த மாணவர்களுக்கு உதவுகிறது.
கைக்கடிகாரத்துடன் இணைக்கப்பட்ட செயலி மூலம் பிஓஎஸ்பி, டிபிஎஸ் வாடிக்கையாளர்கள் பிள்ளைகளின் கைச்செலவுக்குக் கொடுக்கும் பணத்தையும் அவர்களின் செலவின பழக்கங்களையும் நிர்வகிக்க முடியும்.
2017ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லெனியா கல்விக் கழகம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 78,000 மின்னிலக்கக் கைக்கடிகாரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
‘ஸ்மார்ட் படி’ திட்டத்தில் புதிதாக இணைவோர் புதிய வடிவில் வெளியிடப்பட்ட கைக்கடிகாரங்களை இலவசமாகப் பெறுவர். திட்டத்தில் ஏற்கெனவே உள்ளோர் $40 கட்டணத்தில் புதிய வடிவில் உள்ள கைக்கடிகாரத்தைப் பெறலாம்.
கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் இதயத் துடிப்பின் வேகத்தையும் உடற்பயிற்சி செய்யும்போது எவ்வளவு கலோரிகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் கண்டறிய முடியும்.

