அட்டைகளில் முத்திரையிடுவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம், போர்க்காலப் பயிற்சிகளுக்காக முகாம்களுக்குத் திரும்ப அழைக்கப்படும் தேசிய சேவையாளர்களுக்குத் தெரியும்.
இந்நிலையில், ராணுவத்தின் மூன்றாம் படைப்பிரிவு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தாள்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி, தேசிய சேவையாளர்கள் தங்கள் அடையாள அட்டைகளை சிங்பாஸ் செயலி மூலம் வருட அனுமதிக்கிறது.
இந்தப் புத்தாக்கத்தால் மனிதவளத் தேவைகள் 70 விழுக்காடு வரை குறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி, தேசிய சேவையாளர்களின் காத்திருப்பு நேரமும் குறைந்துள்ளது. இதனால், ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக மூன்றாம் படைப்பிரிவின் துணைச் செயலாக்க அதிகாரி கேப்டன் ஷர்மினி சேகர், 34, கூறினார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ‘இக்னைட்’ புத்தாக்கக் கருத்தரங்கில் வழங்கப்படும் முன்னணி ‘தற்காப்பு அமைச்சர் விருதை’ வென்ற நான்கு வெற்றியாளர்களில் இந்தத் திட்டத்தை உருவாக்கிய மூன்றாம் பிரிவும் ஒன்று.
இந்த மின்னிலக்கப் பதிவு முறையை உருவாக்க மூன்று மாதங்கள் எடுத்ததாக கேப்டன் ஷர்மினி கூறினார்.
தற்காப்பு அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், ராணுவ அமைப்புகள் புத்தாக்கத்துடன் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மூன்றாம் படைப்பிரிவினால் உருவாக்கப்பட்ட மின்னிலக்க படைத்திரட்டு கட்டமைப்பு ‘ஒன்என்எஸ்’ (OneNS) பயன்பாட்டில் ஒருங்கிணைக்கப்படும் என்றார் திரு ஹெங் சீ ஹாவ்.

