தேசிய மலிவு விலை உணவுத் திட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) காப்பிக் கடைகளில் அத்தகைய உணவு வகைகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றாலும் வாடிக்கையாளர்கள் அது குறித்து அதிகம் கவலைப்படவில்லை.
தாங்கள் குறிப்பாக மலிவு விலை உணவுகளை மட்டுமே நாடுவதில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பெரும்பாலான உணவக வாடிக்கையாளர்கள் கூறினர்.
மலிவு விலை உணவுகள் பெரும்பாலும் அளவு குறைந்த வழக்கமான உணவுகளே என்றும் அவற்றில் அதிகமான தெரிவுகள் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உணவுக் கடைக்காரர்களும் தாங்கள் விற்பனை செய்யும் இதர உணவு வகைகளைப்போல் மலிவு விலை உணவுகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு உரியனவாக இல்லை என்கின்றனர்.
மலிவு விலை உணவுத் திட்டம், குடியிருப்புப் பேட்டைகளில் உணவு விலையைக் கட்டுப்படியாக வைத்திருக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இருப்பினும், உரிமத்தைப் புதுப்பிக்கும் காப்பிக் கடை உரிமையாளர்கள் இத்தகைய உணவுகளை விற்பனை செய்வது இனி கட்டாயமில்லை என்று வீவக, ஜனவரி 10ஆம் தேதி தெரிவித்தது.
அதிகரிக்கும் செலவினத்தையும் குறைவான வாடிக்கையாளர்களே மலிவு விலை உணவுகளை நாடுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி உணவுக் கடைக்காரர்கள் கவலை தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கழகம் கூறியது.
மலிவு விலை உணவைவிட ஒரு வெள்ளி அதிக விலையில் மேலும் ஒரு காய்கறியுடன் வாங்க முடியும் என்பதையும் அத்தகைய தெரிவுகள் அதிகமாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் சிலர் குறிப்பிட்டனர். தாங்கள் விரும்பியதை வாங்க முடியும் என்பதுடன் அது கட்டுப்படியான விலையிலேயே கிடைப்பதை அவர்கள் சுட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
வேறு சிலர், தங்களுக்கு விருப்பமான உணவு மலிவு விலையில் கிடைப்பது குறித்தும் அது போதுமான அளவில் இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஒரு சிலருக்கோ இத்திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் தங்களுக்கு விருப்பமான உணவு சில நேரங்களில் மலிவு விலையில் கிடைப்பது தெரிந்திருக்கவில்லை.
தாங்கள் வழக்கமாகச் செல்லும் சில காப்பிக் கடைகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை என்றபோதும் நியாயமான விலையிலேயே அங்கு உணவை வாங்க முடிவதாகக் கூறும் முதியவர்கள் சிலர், இனி மலிவு விலை உணவுகளின் எண்ணிக்கை குறையும் என்பது தங்களைப் பாதிக்காது என்கின்றனர்.
மலிவு விலை உணவுகளின் விலையைத் தான் நிர்ணயிப்பதில்லை என்றும் உணவுக்கடை நடத்துவோரே அவற்றை முடிவு செய்கின்றனர் என்றும் வீவக கூறியது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, கழகத்திற்கு வாடகை செலுத்தும் வீவக காப்பிக் கடைகள் 350ம் தனியார் காப்பிக் கடைகள் 48ம் மலிவு விலை உணவுத் திட்டத்தில் பங்கேற்றுள்ளன.
சிங்கப்பூரில் மொத்தம் 805 வீவக காப்பிக்கடைகள் உள்ளன. அவற்றில் சுமார் 400 கடைகள் தனியாருக்குச் சொந்தமானவை.
இந்தக் காப்பிக்கடைக்காரர்களில் சிலர், இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை மலிவு விலை உணவை விற்பதாகவும் ஆனால் வாடிக்கையாளர்கள் வழக்கமான விலையில் விற்கப்படும் உணவு வகைகளையே நாடுவதாகவும் கூறினர். வாடிக்கையாளர்கள் சிலர் மலிவு விலை உணவுடன் சேர்த்து மற்ற உணவுகளையும் வாங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மலிவு விலை உணவுத் திட்டம் அறிமுகமானது முதல் பல்வேறு குறைகூறல்களை எதிர்கொண்டு வருகிறது. உணவின் அளவு, அதிலுள்ள ஊட்டச்சத்து குறித்தும் செலவுகள் அதிகரிக்கும் நிலையில் உணவுக் கடைக்காரர்களால் இத்திட்டத்தைத் தொடர முடியுமா என்பது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

