உணவுத்தட்டுகளை உரிய இடத்தில் வைக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

2 mins read
b34ca9ce-b82d-4012-befb-c2e08d7b84fb
படம்: ராய்ட்டர்ஸ் -

ஜுன் 1 முதல் உணவு நிலையங்களில் தட்டுகளை உரிய இடத்தில் வைக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

வியாழக்கிழமை (ஜுன் 1) முதல் உணவங்காடி நிலையங்களில், காப்பிக் கடைகளில் உணவு அருந்தச் செல்வோர் சாப்பிட்டபின் தங்கள் உணவுத் தட்டுகளை அவற்றுக்கு உரிய இடத்தில் வைத்துவிட வேண்டும்.

அத்துடன், சாப்பிட்ட மிச்சம் மீதி, மெல்லிழைத் தாள்கள் போன்வற்றையும் அவர்கள் அப்புறப்படுத்தி விடவேண்டும்.

இவற்றைச் செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிவித்தது.

இதில் முதல் முறை தவறு செய்வோருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

எனினும், முதியோர், செயல்திறன் இழந்த உடல் நலிவுற்றோர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. மாறாக, அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்த வருவோர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வாரியம் கூறியுள்ளது.

உணவங்காடி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சாப்பிட்டவர்களின் தட்டுகளை உரிய இடத்தில் வைக்க, சாப்பிட்ட மிச்சத்தை சுத்தம் செய்ய உதவினால் அவர்களின் சேவையை உணவு உண்டவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றும் வாரியம் அறிவுறுத்துகிறது.

இதில் அங்காடிநிலை துப்புரவு ஊழியர்கள், அவர்களைப் பணியமர்த்தும் குத்தகைக்காரர்கள் ஆகியோரிடம் அங்காடி நிலையத்தில உணவருந்தும் வாடிக்கையாளர்களின் பொறுப்பு குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதையும் வாரியம் சுட்டியது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து உணவுத் தட்டுகளை உரிய இடத்தில் வைக்கவும் சாப்பிட்ட இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும் ஊக்குவிக்கப்படுவதாக வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

சில நேரங்களில் வாடிக்கையாளர் ஒருவர் தான் சாப்பிட்ட தட்டை, மிச்ச உணவை அப்புறப்படுத்தாமல் போகலாம். அதுபோன்ற வேளைகளில் முந்தைய வாடிக்கையாளர் விட்டுச்சென்ற தட்டைப் புதிதாக உணவு உண்ண வருபவர் அப்புறப்படுத்த வேண்டியதில்லை.

அதைச் செய்ய உணவங்காடி நிலைய அல்லது காப்பிக்கடை ஊழியர்கள் செய்வர் என்று வாரியம் தெளிவுபடுத்தியது.