ஆட்குறைப்புச் சலுகைகளைச் சட்டமாக்குவது பற்றித் தொழிற்சங்கங்கள், நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும்: தினே‌‌ஷ்

ஆட்குறைப்புச் சலுகைகளைச் சட்டமாக்குவது பற்றித் தொழிற்சங்கங்கள், நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும்: தினே‌‌ஷ்

2 mins read
74ce4bf9-cf86-4457-8541-c4b635b4b6de
முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகள் மூலம் தற்போது தகுதிபெறும் 90 விழுக்காட்டு ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு இழப்பீடு கிடைப்பதாக மனிதவளத் துணை அமைச்சர் தினே‌‌ஷ் வாசு தாஸ் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆட்குறைப்பு இழப்பீட்டுச் சலுகைகளைச் சட்டமாக்குவது குறித்து உறுதியான முடிவு எடுப்பதற்கு முன்னர், தொழிற்சங்கங்களுடனும் முதலாளிகளுடனும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்படும் என்று மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் எதிர்காலப் பொருளியல் குறித்துப் பாட்டாளிக் கட்சி கொண்டுவந்த நாடாளுமன்றத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) அவர் உரையாற்றினார்.

“கடந்த காலத்தில் நாங்கள் இதைப் பரிசீலித்தோம். ஆனால் அப்போது இது அவ்வளவு பொருத்தமானதாக இருக்கவில்லை,” என்றார் திரு தினே‌‌ஷ்.

இந்த யோசனை அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆட்குறைப்பு இழப்பீட்டைக் கட்டாயமாக்கினால் சிறிய நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் லீ கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த திரு தினேஷ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடனும் தொழிற்சங்கங்களுடனும் ஆலோசித்த பின்னரே அரசாங்கம் இதுதொடர்பில் முடிவெடுக்கும் என்றார்.

முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகள் மூலம் தற்போது தகுதிபெறும் 90 விழுக்காட்டு ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு இழப்பீடு கிடைக்கிறது; பொருளியல் உத்தி மறுஆய்வின் பரிந்துரைப்படி, அந்த விகிதத்தை மேலும் உயர்த்த முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சருமான திரு தினே‌‌ஷ் குறிப்பிட்டார்.

பாட்டாளிக் கட்சி பரிந்துரைத்த புதிய வேலை இழப்புக் காப்புறுதித் திட்டத்திற்குப் பதிலாக, நடப்பில் உள்ள வேலை ஆதரவுத் திட்டத்தை வலுப்படுத்தவே பொருளியல் உத்தி மறுஆய்வு பரிந்துரைத்துள்ளது. பொருளியல் சவால்களைச் சமாளித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்ய முத்தரப்புப் பங்காளித்துவம் மிகவும் அவசியம் என்றும் திரு தினேஷ் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்