சாங்கி விமான நிலையம் அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து நேரடி விமானச் சேவை வழங்கக்கூடிய நகரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த உள்ளது.
ஐந்தாம் முனையத்தை நிறுவும் பணிகளை 2030ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் முடிக்கவும் சாங்கி விமான நிலையக் குழுமம் முயன்று வருகிறது.
குழுமத்தின் விமானப் போக்குவரத்து மையம் மற்றும் சரக்கு மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் லிம் சிங் கியட் இந்தத் தகவல்களை தெரிவித்தார். சாங்கி விமான நிலைய முனையம் 2ல் திங்கட்கிழமை (ஜூலை 13) செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.
இனி வரும் பத்தாண்டுகளில் அதிகமான பயணிகள் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூரிலிருந்து செல்லக்கூடிய புதிய வழித்தடங்களில் பெரும்பாலானவை அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என்றார் அவர்.
இந்தோனீசியாவின் பண்டா அச்சே, பன்ஜார்மாசின், வியட்னாமின் ஹாய் ஃபோங், டா லாட், கஸக்ஸ்தானின் அல்மாட்டி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் போன்ற நகரங்களை இணைக்க குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் திரு லிம் தெரிவித்தார்.
சிங்கப்பூருடன் போதிய விமானச் சேவைத் தொடர்பு இல்லாததால், தேவையான சேவைகள் சென்றடையாத அத்தகைய நகரங்களை ‘வெண்புள்ளிகள்’ என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அதிக மக்கள்தொகையும் குறிப்பிடத்தக்க செலவுத்திறனும் கொண்ட மாகாணத் தலைநகரங்களாக அவை இருந்தால், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக ரீதியான பயணங்களுக்கு அவற்றிலிருந்து வலுவான தேவை உருவாகக்கூடும் என்றார் திரு லிம்.
சீனாவின் உரும்கி மற்றும் ஹோஹோட், இந்தியாவின் லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களும் சாங்கி விமான நிலையம் நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கும் நகரங்களின் பட்டியலில் அடங்கும்.
தற்போது, சாங்கி விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களில் 85 விழுக்காடு ஆசிய பசிபிக் வட்டார நகரங்களுக்கே சென்று வருகின்றன.

